செங்கோட்டை நூலகம் என்றாலே எழுத்தாளர்களுக்கு அவர்களை அறியாமலேயே சந்தோஷம் பிறக்கிறது. காரணம் அதன் நூலகர் செங்கோட்டை ராமசாமி அவர்கள். அவர் கடந்த வருடம் நாகர்கோயிலில் நடந்த புத்தக கண்காட்சியில் எனக்கு அறிமுகமானார். தொடர்ந்து என்னுடைய “தோரணமலை யாத்திரை” நூலை செங்கோட்டை நூலகத்தில் வைத்து திறனாய்வு செய்தார்.
அவர் திறனாய்வே மிக வித்தியாசமாக இருந்தது. ‘தோரணமலை யாத்திரை’ 30 நூலை வாங்கி அவர் மாணவ மாணவிகளிடம் கொடுத்து அதை படித்து கட்டுரை எழுத வைத்துக் கொண்டிருந்தார்.
என் நூலை 62 பேர் திறனாய்வு செய்திருந்தார்கள். அதன் பிறகு தான் செங்கோட்டை மக்களில் வாசிப்பு ஆர்வம் என்னை பிரமிக்க வைத்தது. அதனால் தான் ராமசாமி அய்யா மீது எனக்கு பற்றுதல் அதிகரித்தது.
அதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளர் சுதாகர் எழுதிய “கவிதை பூக்கள்” நூலை சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் கோதண்டம் அவர்கள் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். அந்த நூல் வெளியிட்டு விழாவிற்கு நான் செங்கோட்டை சென்று இருந்தேன்.
அப்போது தான் மணியாச்சி ஜமீன்தாரை பற்றி விசாரித்தேன். உடனே ராமசாமி அய்யா எனக்கு ஏற்பாடு செய்தார். வணக்கம் மும்பை என்னும் மும்பையில் இருந்து வெளிவரும் ஒரே ஒரு தமிழ் வார இதழில் தொடராக எழுதி வருகிறேன்.
நான் தினத்தந்தியில் செவ்வாய் கிழமை தோறும் எழுதும் ‘அதிசய சித்தர்கள்’ தொடருக்கு செங்கோட்டை சென்ற போது, ஒவ்வொரு சித்தர் பீடத்துக்காக என்னை அழைத்து சென்றார். எங்களோடு எந்தவித பிரதிபலனும் இல்லாமல் சிறு குழந்தை போலவே அவர் சுற்றி வந்தார். டி.என்.பி.எஸ்.சி தேர்வு உள்பட அரசு தேர்வுகளுக்கு பயிற்சி, நூல் வெளியிட்டு விழா என பல முகங்கள் இவருக்கு உண்டு.
இவருக்கு நாம் ஏதாவது உதவியாக இருக்கலாமே என்று நினைத்தால் அதற்காக எந்த வாய்ப்பும் தராமலேயே கடத்தி கொண்டிருந்தார். இறுதியில் நாமும் நூலகத்திலாவது பங்கு பெற வேண்டும் என ஆசைப்பட்டேன். செங்கோட்டை நூலக புரவலராக நாம் ஆகிவிடலாம் என முடிவு செய்தேன். இறுதியில் செங்கோட்டை நூலக புரவலராகி விட்டேன்.
இதன் மூலம் எனக்கும் செங்கோட்டை நூலகத்துக்கும் உறவு வலுத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு வாய்பளித்த நூலகர் ராமசாமி அய்யாவுக்கு நன்றி. மிக்கநன்றி.