நிலா நாட்கள் தமிழருக்கு விழா நாட்கள். சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் நீர்நிலைகள் நிரம்பிய நதிக்கரையில் கூடி கொண்டாட்டத்தோடு கூட்டு விருந்துண்டு, விளையாடி கலை காட்சிகள் நடத்தி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள் நமது முன்னோர்கள்.
இதனை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கூடி உண்ணும் கூட்டாஞ்சோறு திருவிழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சகாயஜோஸ் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி பரம்பரை அத்தார் கருத்தப்பாண்டி, முஸ்லீம் வணிகர் சங்க தலைவர் பாக்கர் அலி உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
அதன்பின்னர் கூடி உண்ணும் கூட்டாஞ்சோறு தாமிரபரணி ஆற்றின் கரையில் வைத்து நடந்தது. இதற்காக சேர்மன் கோவில் முன்பு 3 மிகப்பெரிய அளவிலான பாத்திரத்தில் 110 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் என பிரமாதமாக செய்யப்பட்டிருந்த கூட்டாஞ்சோறு உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஏரல் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் செய்திருந்தனர்.