தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட காலாங்கரை கிராமத்தில் இன்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-27ஆம் நிதியாண்டில் செம்படம்பர் 2026ஆம் மாதம் முதல் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் மாதத்திற்கு மூன்று முகாம்கள் வீதம் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 216 கிராம ஊராட்சிகளில் “சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடைபெறவுள்ளது.
மேற்கூறிய முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், மடிவீக்க நோய் மேலாண்மை, குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் போன்ற பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், அவசர சிகிச்சை/மேல் சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை பன்முக மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படும்.
தொடர்ந்து, முகாமின் போது அறுவை சிகிச்சை, சிறப்பு மகப்பேறியல் மருத்துவ உதவி மற்றும் மலட்டுத் தன்மை போன்றவைகளுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படும் கால்நடைகள் அடையாளம் காணப்பட்டு “உடல்நல (பின்தொடர் சிகிச்சை) அட்டை” வழங்கப்பட்டு முகாமிற்கு அருகிலுள்ள கால்நடை நிலையங்களால் பின்தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
கால்நடைகளுக்கு உடனடி மற்றும் முறையான சிகிச்சையை வழங்குவதற்காக, நோய்களைக் கண்டறிதல், குடற்புழு தொற்று கண்டறிதல், மடி நோய்க்கான ஏபிஎஸ்டி (ABST) சோதனை போன்றவற்றை கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் மூலம் முகாம்களிலேயே கண்டறியப்பட்டு தீர்வு காணப்படும். மேலும் மேம்பட்டத்திறன் ஆய்விற்கு பல்கலைக்கழக ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும்.
இச்சிறப்பு முகாம்களின் விரிவாக்க செயல்பாடுகளில் ஒன்றாக கன்று பேரணி நடத்தப்பட்டு, கன்றுக் குட்டிகளில் சிறந்த உடல் எடை மற்றும் ஆரோக்கிய நிலையை வெளிப்படுத்திய சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். குறைந்த உடல் எடை / குறுகிய வளர்ச்சி உள்ள கன்றுகளின் உரிமையாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் குடற்புழு நீக்கத்தை உறுதி செய்யவும், வளர்ச்சியைக் கண்காணிக்கவும் மற்றும் தீவன மேலாண்மை முறைகள் பற்றியும் குறிப்பாக அறிவுறுத்தப்படும்.
இம்முகாமில் 1200 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே கால்நடை வளர்ப்போர் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரை முகாம்கள் நடத்தப்படும் கிராமங்களில் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
பின்னர், மாடு கன்றுகளை சிறந்த முறையில் பராமரிப்பு மேற்கொண்ட மாடு வளர்ப்போருக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் மண்டல இணை இயக்குனர் (பொ) ஆபிரகாம் ஜாப்ரி, உதவி இயக்குனர்கள் வேலு மாணிக்கவள்ளி, சந்திரா, பூபாலன், கால்நடை உதவி மருத்துவர்கள் குழு, கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உள்ளனர்.


