தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….
தமிழகத்தில் பெருகி வரும் தொழிற்சாலைகள் மற்றும் அரசுத் திட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்புச் சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என ‘மக்கள் நல கூட்டமைப்பு’ சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அசன் தலைமையில் அமைப்பின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்: இந்தியாவிலுள்ள பல மாநிலங்கள் தங்கள் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளன. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் 2019-ஆம் ஆண்டு 75% வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு உறுதியளித்துள்ளது.
தமிழகத்தில் செயல்படும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசுச் சலுகை மற்றும் நிலம் பெறும் நிறுவனங்களில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் குறைந்தபட்சம் 90% பணியிடங்களைத் தமிழக இளைஞர்களுக்கு வழங்கும் சிறப்புச் சட்டத்தை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.
உள்ளூர் இளைஞர்களிடம் தேவையான தொழில்நுட்பத் தகுதி இல்லாத பணிகளுக்கு, அவர்களுக்குத் தகுந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அரசு மற்றும் நிறுவனங்கள் வழங்கிப் பின்னர் அப்பணிகளில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்தநிகழ்வில் தமிழர் விடியல் கட்சி, திராவிடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி, புரட்சி பாரதம், ஆதித்தமிழர் கட்சி மற்றும் பிற தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


