வாழவல்லான் 3 பூஸ்டர் குடிநீர் திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாகச் சுத்திகரிப்பு மோட்டார் பழுதடைந்துள்ளதால், தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாகச் சுத்திகரிக்கப்படாத நீர் விநியோகிக்கப்படுவதைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் சு. நம்பிராஜன் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஏரல் வட்டம், வாழவல்லான் 3 பூஸ்டர் திட்டத்தின் கீழ் 1.5 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்க் மூலம் வாழவல்லான், மூக்கPost, உமரிக்காடு, லட்சுமிபுரம், கொற்கை, அதிசயபுரம் உள்ளிட்ட 16 கிராமங்களுக்குத் தாமிரபரணி ஆற்றிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரைச் சுத்திகரிக்கும் மோட்டார் பழுதடைந்துவிட்டது. இதனால் ஆற்றிலிருந்து கலங்கலான சுத்திகரிக்கப்படாத குடிநீர் நேரடியாக இந்த 16 கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கலங்கலாகவும் சுத்தமில்லாமலும் விநியோகிக்கப்படும் குடிநீரைப் பயன்படுத்துவதால் அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு, பழுதடைந்த சுத்திகரிப்பு மோட்டாரைச் சீரமைத்து, 16 கிராம மக்களுக்கும் சுத்தமான மற்றும் சுகாதாரமான சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


