
சாத்தான்குளம் குடிநீரேற்றும் நிலையத்தில் 6மாதமாக மின் மோட்டார் பழுதாகியுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பழுதுப்பட்டுள்ள மின் மோட்டாரை சீரமைத்து, முறையாக குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னன்குறிச்சியில் இருந்து சாத்தான்குளம் – உடன்குடி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பொன்னன்குறிச்சியில் இருந்து வரும் குடிநீரை சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் உள்ள மேல் நிலை குடிநீர் தொட்டியில் தேக்கி, சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிக்கு இரண்டு நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 6மாதத்திற்கு முன்பு இதில் உள்ள ஒரு மோட்டார் பழுதடைந்தது.
இதனால் எஞ்சிய மோட்டார் மூலம் குடிநீர் ஏற்றப்படுகிறது. இதனால் போதுமான குடிநீர் ஏற்ற முடியாததால், பேரூராட்சி பகுதியில் குடிநீர் விநியோகிப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போதுமான தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பழுதான மின்மோட்டாரை பழுது பார்த்து குடிநீர் முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். ஆனாலும் 6மாதமாகியும் மோட்டார் பழுது பார்க்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து பேருராட்சி முன்னாள் தலைவர் ஜோசப் கூறியது: மின் மோட்டார் பழுதால் பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின்மோட்டாரை பழுதை சரிசெய்து, சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.