சாத்தான்குளம் அருகே காவல் நிலையத்தில் வழக்கறிஞர், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இடையே ஏற்பட்ட மாேதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அரசூர் பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிசயாமி (46), இவர் சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் சாத்தான்குளத்தில் உள்ள தனது மனுதாரரின் நிலப்பிரச்சனை தொடர்பாக தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சுந்தரம், புகார் மனுவுக்கு ரசீது தரவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வழக்கறிஞர் பெரியசாமியை சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் தாக்கினாராம்.
இதையடுத்து இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் வழக்கறிஞர் சங்க செயலளார் சேவியர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து டிஎஸ்பி பாலசந்திரன், நாசரேத் இன்ஸ்பெக்டர் ரேனியல் ஜேசுபாதம், மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். இருதரப்பிற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எஸ்ஐ சுந்தரம், வழக்கறிஞர் பெரியசாமி ஆகிய இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகறித்து ஒருவர் மீது ஒருவர் அளித்த புகாரின் பேரில், தனித்தனியே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.