ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
நவதிருப்பதிகளில் 9வது திருப்பதியாகத் திகழும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் உற்சவர் பொலிந்துநின்ற பிரான் என்ற பெயருடன் பூமாதேவி, நீளாதேவி சமேதராக அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நம்மாழ்வாரும், பொலிந்துநின்ற பிரான் தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவியுடன் கொடி மரம் அருகே எழுந்தருளினர். பட்டாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழங்கி கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து காலை 7.10மணிக்கு ராமபட்டாச்சாரியார் கொடியேற்றினார்.
இதில், நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ராமானுஜ ஜீயர், ஆழ்வார் கைங்கர்ய சபா வரதராஜன், காரிமாறன் கலைக் காப்பகத்தினர், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பக்தர்கள் என திரளானோர் பங்கேற்றனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து நாளை மறுதினம் (21ம் தேதி) எம்பெருமானார் எதிர்சேவையும், 22ம் தேதி கருடசேவையும், 26ம் தேதி புதிய தேரின் தேரோட்டமும், 27ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் விஸ்வநாத், ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் வரதராஜன் மற்றும் பக்தர்கள் செய்துவருகின்றனர்.


