தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடம். இங்கு அகழாய்வு பணி 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆய்வில் அதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 4 கட்ட அகழாய்வு நடந்துள்ளது. இங்கு மீண்டும் அகழ்வாய்வு செய்ய வேண்டும், இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை அருங்காட்சியகம் அமைத்து இங்கு வைக்கவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஆதிச்சநல்லூர் பகுதியை தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள செயிண்ட் மேரிஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் பார்வையிட வருகை தந்தனர். அவர்கள், முன்பு அகழ்வாய்வு நடந்த பகுதி, கால்வாய் ரயில்வே கேட், தாமிரபரணிக்கரை படித்துறை, ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிச்சநல்லூர் தகவல் மையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர். அவர்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வழிநடத்தி சென்று ஆய்வு பகுதிகள் மற்றும் பழமை குறித்து விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து கல்லூரி மாணவிகள் கூறுகையில், ஆதிச்சநல்லூர் நாகரீகம் மிகவும் பழைமை வாய்ந்த நாகரீகம். மேலும் உலக நாகரீகத்தின் தொட்டில் என போற்றப்படுகிறது-. இந்த ஆதிச்சநல்லூர் 114 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த 114 ஏக்கர் ஒரு சதவீத அளவு மட்டுமே அகழ்வாய்வு நடந்துள்ளது. முழுவதும் ஆய்வு செய்தால் தமிழனின் பண்பாடு, நாகரீகம், கலச்சாரங்களை உலகம் முழுவதும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். எனவே மத்திய அரசும், மாநில அரசும் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


