தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள பக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(65). இவர் சைக்கிளில் சென்று சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கிராமங்களில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.
இவரது மகன் ராமையா. கூலித்தொழிலாளி. இவர் தனது தந்தையின் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி இறந்து விட்டார். இவர்களது மகள்கள் சத்யா, கவிதா. மகன் சுடலைமணி(18). இவர்களில் சத்யா திருமணமாகி அதே ஊரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கவிதா, தூத்துக்குடியில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வருகிறார். 8ம் வகுப்பு வரை படித்துள்ள சுடலைமணி நெல்லையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். தினமும் பேருந்தில் தான் வேலைக்கு சென்று வருவார். நேற்று இரவு பணி முடிந்து பேருந்தில் ஏறிய சுடலைமணி இரவு 10 மணி கடந்து விட்டதால் தனது தாத்தா முத்துச்சாமிக்குகு போன் செய்து பேருந்து நிலையத்தில் வந்து நிற்கும்படி கூறியுள்ளார். அதன்படி முத்துச்சாமி தனது பேரனுக்காக பக்கப்பட்டி பேருந்து நிலையத்தில் வந்து நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் பேருந்து வந்து நிற்கவும் அதிலிருந்து சுடலைமணி இறங்கினார்.
அப்போது ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பிக்க சுடலைமணி தலைதெறிக்க ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துச்சாமி அந்த கும்பலை விரட்டிச் சென்று தனது பேரனை விட்டு விடும்படி கூறினார். ஆத்திரமடைந்த அவர்கள் முத்துச்சாமியையும் சரமாரியாக வெட்டினார். தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுப்பட்ட தாத்தா, பேரன் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். அதன்பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவல் அறிந்து தூத்துக்குடி எஸ்.பி.முரளிரம்பா, ஏடிஎஸ்பி பொன்ராம், ரூரல் டிஎஸ்பி முத்தமிழ், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தினர். மேலும் இருவரது உடலையும் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் இறந்தவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் அவர்கள உடலை வாங்கிச் சென்றனர்.
போலிசார் நடத்திய விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பக்கபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரமுத்து மகன் வடிவேல் முருகன். இவரும் கொலையான சுடலைமணியும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கடந்த மே மாதம் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் சின்னதம்பி (30) அதே ஆற்றில் குளிக்க வந்தாராம். அப்போது. வடிவேல் முருகன் எங்கள் பகுதி ஆற்றில் எப்படி குளிக்கலாம் என்று கூறி சின்னதம்பியுடன் தகராறு செய்து அவரை சாதிப்பெயரை கூறி திட்டி தாக்கினாராம்.
இதுகுறித்து சின்னதம்பி முறப்பநாடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வடிவேல் முருகன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் எதிரொலியாக சுடலைமணிக்கும் சின்னதம்பிக்கும் இடையே பகை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று சின்னதம்பி அவரது அண்ணன் மாரிமுத்து (35), தம்பிகள் அருண்குமார் (28), உட்பட 4 பேர் சேர்ந்து சுடலைமணியை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க முயன்றதால் அவரது தாத்தாவையும் கொலை செய்து உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முறப்பநாடு போலிசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
=====


