தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகிலுள்ள பிரசித்திப் பெற்ற தேரிக்குடியிருப்பு கற்குவேல் ஐயனார் கோவில் கள்ளர்வெட்டு திருவிழா விமரிசையாக நடந்தது. கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி இத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிசேகங்கள் மற்றும் வில்லிசை மூலம் கற்குவேல் ஐயனாரின் பிறப்புக் கதை பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
இந்த 30 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர்வெட்டுத் திருவிழாவை முன்னிட்டு இன்று பக்தர்கள் 108 பால்குடமும், தாமிரபரணியிலிருந்து தீர்த்தமும், பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரியும் எடுத்து வந்தனர். கள்ளர் சுவாமி ஆடும் சுவாமியாடிகள், மேளதாளம் முழங்க, கடைவீதிகளில் ஒவ்வொரு கடையிலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களில் சிலவற்றை எடுத்து ஓலைப்பெட்டியில் போட்டு களவாடும் ‘எடுப்பெடுத்தல்’ நிகழ்ச்சி நடந்தது. எடுப்பெடுத்த பொருட்களில் ஒரு பங்கை வில்லிசை பாடுபவருக்கும், இரண்டாவது பங்கை மேளக்கார்ருக்கும் மூன்றாவது பங்கினை கோவில் பூசாரிக்கும் கள்ளர் சுவாமியாடிகள் பங்கு வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, கோவிலுக்குப் பின்புறமுள்ள பரந்து விரிந்த செம்மண் சூழ்ந்த தேரிக்கட்டில் குவிக்கப்பட்ட மணல் மேட்டில் குங்குமம் தடவி ரோஜாப்பூ மாலை சுற்றி வைக்கப்பட்டு அதனை சுவாமியாடி ஆக்ரோஷத்துடன் வெட்டும் ‘கள்ளர் வெட்டு’ நிகழச்சிக்குப் பின், கள்ளர் மீது தண்ணீர் தெளித்து விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. கள்ளர் வெட்டுக்குப் பின் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு இளநீர் வெட்டப்பட்ட தேரிக்காட்டு செம்மண்ணை எடுத்தனர். இந்த மணலை வயலில் போட்டால் விளைச்சல் கூடும், பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பாண்டிய மன்னனிடம் கைகட்டி மனித உருவில் சேவகம் பார்த்தவர்தான் இந்த கற்குவேல் ஐயனார். ஐயானாரின் ஆளுகைப் பகுதிக்குள் நுழைந்து பொருட்களைத் திருடிச் சென்ற திருடனான கள்வரை ஐயனாரின் படைத்தளபதியான வன்னியராஜா வெட்டும் நிகழ்ச்சிதான் கள்ளர்வெட்டு. கள்ளருக்குப் பதிலாக செவ்விளநீரை கயிற்றால் கட்டி வெட்டுகிறார்கள். வெட்டப்பட்ட இளநீர் பட்ட மண்ணை பக்தர்கள் புனிதமண்ணாக கூறுகிறார்கள். கிடா வெட்டு, மஞ்சள்நீராட்டு நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது கள்ளர் வெட்டுத் திருவிழா.
இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.