தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலுக்கு இடையே, நேற்று ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கொட்டித் தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மதியம் சுமார் 12:30 மணியளவில் திடீரென வானம் இருண்டு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாகத் தென்திருப்பேரை, புதுக்குடி, கருங்குளம் மற்றும் செய்துங்கநல்லூர் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை இடைவிடாமல் பெய்தது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.
செய்துங்கநல்லூர் பகுதியில் பெய்த கனமழையால் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வியாபாரிகள் வைத்திருந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் மழையில் நனைந்தன. மக்கள் நடமாட்டம் இன்றி சந்தை வெறிச்சோடியதால் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஏரல் பகுதியில் மதியம் 12:20 மணியளவில் தொடங்கிய கனமழை சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. கழுகுமலை பகுதியில் மதியம் 2:30 மணியளவில் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் இதமான சூழல் உருவானது.
தூத்துக்குடி நகர் பகுதியிலும் குளிர்ந்த காற்று வீசி மேகமூட்டமான சூழல் நிலவியது. இந்த மழை நீடித்தால் வறண்டு கிடக்கும் குளங்கள் மற்றும் ஆறுகளுக்குத் தண்ணீர் வரத்து ஏற்படும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.


