செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கினர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்திடும் பொருட்டு நாடு முழுவதும் 21நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கடுமையான நடவடிக்கைகளால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் வழங்கும் பணிகள் துரிதமாக துவங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்துங்கநல்லூர்கிளை சார்பில் செய்துங்கநல்லூர் மற்றும் தாதன்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வருமானம் இன்றி பரிதவித்துவரும் ஏழை&எளிய மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அரிசி, எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் கிளைத் தலைவர் சாதிக் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் செயலாளர் வஹாப், பொருளாளர் அப்துல் கனி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அணி அணியாக பிரிந்து ஏழை-எளிய மக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப்பொருட்களை வழங்கினர். தொடர்ந்து கொரோனா எனும் கொடிய வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்திட விழிப்புணர்வு பிரச்சாரம் (ஆடியோ மூலம்) செய்யப்பட்டது.


