செய்துங்கநல்லூரில் பொது கழிவறை அமைக்க சண்முகநாதன் எம்.எல்.ஏ நிதியுதவி அளித்தார்.
செய்துங்கநல்லூர் பஜாரில் நீண்ட நாள்களாக பொது கழிவறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் தனது எம்.எல்.ஏ உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஓதுக்கீடு செய்து அந்த பணியை துவக்க உத்தரவிட்டார். ஆனால் கழிவறை கட்டிட பொது இடம் இல்லை என அந்தபணி கிடப்பில் கிடந்தது. இதற்கிடையில் பஞ்சாயத்து தலைவராக பொறுப்பேற்ற பார்வதிநாதன் எம்.எல்.ஏவிடம் மீண்டும் நிதி உதவி கேட்டு மனு செய்திருந்தார். எனவே கழிவறை கட்ட வேண்டிய இடத்தினை ஆய்வு செய்ய ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சுப்பு லெட்சுமி ஆகியோர் செய்துங்கநல்லூர் வந்து பார்வையிட்டனர்.
அவர்களுடன் கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், அய்யப்பன், சுப்பையா பாண்டியன், 10 வது வார்டு கவுன்சிலர் சுடலைமுத்து, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்பட பலர் உடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பவுண்டி என்னும் இடத்தில் பொது கழிவறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் பஞ்சாயத்து நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் நிதி தேவைபட்டால் அதை தருவதற்கும் தயாராக உள்ளதாக எம்எல்.எ சண்முகநாதன் அறிவித்தார்.
முன்னதாக கருங்குளம் சத்திரத்தில் எம்.எல்.ஏ சண்முகநாதன் ஏற்பாடில் அமைக்கப்பட உள்ள பஸ் நிலையத்திற்கான இடத்தினையும் ஆய்வு செய்தார்.