ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் துவங்க உள்ள நிலையில் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ள இடத்தினை தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தனர்.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த 2004ம் ஆண்டு நடந்த அகழ்வாய்வின் அறிக்கையை வெளியிட வேண்டும். மீண்டும் இந்த ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் அதற்காக மாநில அரசு சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த ஜனவரி மாதம் துவங்கும் என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் கடந்த மாதம் அகழாய்வு பணி துவங்குவதற்கான முதற்கட்ட பணியாக தரையில் ஊடுருவும் ரேடார் கருவி மூலம் கீழே உள்ள பொருட்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது. அதன்பின்னர் அகழாய்வு பணி விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில் மாநில அரசு சார்பில் ஆதிச்சநல்லூர் பகுதியில் 35 லட்சம் செலவில் கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் தகவல் மையத்தை தமிழக தொல்லியல் துறையைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அலுவலர் லோகநாதன், நெல்லை மாவட்ட அலுவலர் பாஸ்கரன், தருமபுரி மாவட்ட தொல்லியல் அலுவலர் பிரபாகரன், தஞ்சாவூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் தங்கதுரை, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுடன் கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதய சங்கர், கால்வாய் முருகையா பாண்டியன் உள்பட பலர் உடன் வந்திருந்தனர்.
மேலும் இந்த பகுதியில் நடைபெற உள்ள அகழாய்வில் கண்டுபிடிக்கும் பொருட்கள் அனைத்தையும் இந்த தகவல் மையத்தில் வைத்து பாதுகாக்க உள்ளதாகவும், அதற்காக சிதிலமடைந்து கிடக்கும் கட்டிடத்தினை சீரமைத்து தர வேண்டும் என்று தொல்லியல் அலுவலர்கள் கோரினர். அதற்கு கருங்குளம் ஒன்றியம் சார்பில் வருகை தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலெட்சுமி உடனே சீரமைத்து தருவதாகவும் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாகவும் உறுதி அளித்தனர்.
இந்நிலையில் இந்த ஆதிச்சநல்லூரில் இன்னும் ஓரிரு தினங்களில் அகழாய்வு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.