தமிழகத்தில் முழு ஊரடங்கை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு விதித்துள்ளது. இந்நிலையில் மதுபான கடைகள் திறக்காத காரணத்தால் சட்டவிரோதமாக மதுபான விற்பனை, கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.வெங்கடேசனுக்கு செய்துங்கநல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் ஆண்டனி திலீப், கருத்தையா, கண்ணன், முத்துராமன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது செய்துங்கநல்லூர் அருகே உள்ள நட்டார்குளத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் மாணிக்கராஜ்(55), அதே ஊரை சேர்ந்த ஜேசுதிரவியம் மகன் அந்தோணிராஜ்(55) இருவரும் அவர்களது உறவினர்கள் திருமணத்திற்காக கள்ளச்சாராயம் காய்ச்ச முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று நாட்டார்குளத்தில் உள்ள மாணிக்கராஜின் தோட்டத்தில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரையும் போலீசார் மடக்கிபிடித்தனர்.
அவர்களிடமிருந்து ஊரலில் இருந்த 30 லிட்டர் கலவையை கைப்பற்றி கீழே கொட்டி போலீசார் அளித்தனர். மேலும் 10 லிட்டர் வடித்த சாராயத்தையும் கீழே கொட்டி அழித்தனர். மாணிக்கராஜை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அந்தோணிராஜை போலிசார் தேடி வருகின்றனர்.