
கடந்த 27.12.2019 அன்று சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சி, வேலன்புதுக்குளம் 27 ஸ்ரீபாண்டி துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றபோது காலை 08.00 மணிக்கு வேலன்புதுக்குளம், நடுத்தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் முத்துமாலை (வயது 43), சுடலைக்கண் மகன் பரமசிவன் (32), பரமசிவன் மகன் கண்ணன் (வயது30), ராமச்சந்திரன் மகன் செந்தூர்பாண்டி (வயது 45) மற்றும் அடையாளம் தெரிந்த ஒருவர் ஆகிய குற்றச்சாட்டுனர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவுக்கு இடையூறு செய்யும் வகையில் தேர்தல் அலுவலர்களை, அவர்களது அரசு வேலையை செய்ய விடாமல் தடுத்து மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து மேற்படி வாக்குச்சாவடியின் வாக்குப்பதிவு தலைமை தேர்தல் அதிகாரி சார்லஸ் திரவியம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 28.12.2019 அன்று முத்துமாலை மற்றும் பரமசிவன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பரமசிவன் மகன் முத்துமாலை (வயது 43) என்பவர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவின்படி சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் குற்றச்சாட்டுனர் முத்துமாலை என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தார்.