தமிழகம் முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள ‘புதிய ஊரக வளர்ச்சித் திட்டம் தொடர்பாக, தே.கல்லுப்பட்டியில் வட்டார மற்றும் மாவட்ட சமூகத்தணிக்கை வள பயிற்றுநர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்சி மையத்தில் இத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிதியுதவியுடனும், தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு மாநில சமூக தணிக்கை அலகு சார்பில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்புதிய திட்டம் குறித்து மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் பயிற்றுநர்கள் 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. முகாமிற்குச் சமூக தணிக்கை மாநில இணை இயக்குநர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவன உதவி இயக்குநர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட வள பயிற்றுநர் மணி வரவேற்றார்.
இப்பயிற்சி முகாமில் சமூகத் தணிக்கை முதன்மை பயிற்றுநர்கள் கெவுஸ் கான், சுந்தர்ராஜன், சரிதா, முத்துக்குமரன், மாதர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, குறை தீர்ப்பாளர் காயத்ரி மற்றும் உதவிப் பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இதில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 121 வளப்பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக மதுரை மாவட்ட வள பயிற்றுநர் அப்துல்காதர் ஜெய்லானி நன்றி கூறினார்.
இதேபோல, பட்டுக்கோட்டை, பவானிசாகர், கிருஷ்ணகிரி, எஸ்வி நகரம் ஆகிய ஊர்களில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி மையங்களிலும் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை மொத்தம் 505 சமூக தணிக்கை வள பயிற்றுநர்களுக்கு இந்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


