
ஸ்ரீவைகுண்டம் அருகே குற்றவாளியை பிடிக்க சென்ற காவலர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவலர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல் முறையாக தமிழக டிஜிபி திரிபாதி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தில் பதுங்கியிருந்த கொலை குற்றவாளி துரைமுத்துவை பிடிப்பதற்காக நேற்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் போலிசார் சென்றனர். அப்போது மணக்கரை மலை அடிவாரத்தில் பதுங்கியிருந்த துரைமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் போலிசாரை கண்டதும் தப்பி ஓடினர். அதில் மூன்று பேரை போலிசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான துரைமுத்து தப்பி மலையை நோக்கி ஓடினார். அவரை போலிசார் பின்தொடர்ந்தனர். அப்போது குற்றவாளி துரைமுத்து கையில் வைத்திருந்த வெடிகுண்டை போலிசார் மீது வீசியுள்ளார். இதில் ஆழ்வார்திருநகரியில் காவலராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் என்பவரை தலை சிதறி உயிரிழந்தார். மேலும் குண்டு வீசிய குற்றவாளி துரைமுத்துவும் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிரிழந்த சுப்பிரமணியன் உடலையும் படுகாயமடைந்த துரைமுத்துவையும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியில் துரைமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தென்மாவட்டங்களில் உள்ள 480 காவல் நிலையங்களிலும் காவலர் சுப்பிரமணியன் புகைப்படம் வைக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்கிடையில் சுப்பிரமணியனின் உடலானது இன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சுமார் 1.30 மணிக்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 3 மணி அளவில் பிரேத பரிசோதனை முடிந்து காவலர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் உடல் கொண்டு செல்லும் வாகனத்தின் முன்னும், பின்னும் போலிசார் அணிவகுத்து வாகனமானது வல்லநாடு, புதுக்கோட்டை வழியாக காவலர் சுப்பிரமணியனின் சொந்த ஊரான பண்டாரவிளைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அவரது இல்லத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்டாரவிளை கல்லறைத் தோட்டத்தில் காவலர் சுப்பிரமணியனின் உடல் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் டிஜிபி திரிபாதை கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். தமிழக டிஜிபி திரிபாதி இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கொள்வது இதுவே முதல் முறையாகும். அதன்பின்னர் தென்மண்டல ஐஜி முருகன், திருநெல்வேலி காவல்துறை சரகத்தின் துணைத்தலைவர் பிரவின்குமார் அபினவ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி ரமேஷ் நாடார் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு காவலர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின்னர் காவலர் பணியாற்றிய ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நல்லடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
அங்கு அரசு மரியாதையுடன் அணிவகுப்பு நடந்தது. அதன்பின்னர் துப்பாக்கியில் இருந்து 10 காவலர்கள், 3 முறை வானத்தை நோக்கி சுட 30 குண்டுகள் முழங்கப்பட்டது. அதன்பின்னர் சுப்பிரமணியனின் மனைவி புவனேஷ்வரி மற்றும் 10 மாத குழந்தையும், தந்தை மற்றும் உறவினர்களும் அவரது உடலுலை பார்த்து கதறி அழுதனர். அது பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வரவழைப்பதாக இருந்தது. அதன்பின்னர் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு டிஜிபி திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் ஆறுதல் கூறினர்.
==