மணக்கரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வனத்துறை பகுதியை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை மலைப்பகுதியில் கடந்த 18ம் தேதி இரட்டை கொலை வழக்கில் கைதான குற்றவாளி நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அந்த பகுதியில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் போலிசார் அப்பகுதிக்கு வருகை தந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகள் 4 பேர் போலிசாரை கண்டதும் மலையை நோக்கி ஓடினர். அதில் மூன்று பேரை போலிசார் பிடித்தனர். முக்கிய குற்றவாளியான துரைமுத்து மட்டும் தப்பி ஓடினார். அவரை போலிசார் பின்தொடர்ந்தனர். அப்போது துரைமுத்து தனது கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை போலிசார் மீது எறிந்தான். இதில் ஆழ்வார்திருநகரியில் காவலராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் என்பவர் தலையில் பட்டு அவர் தலைசிதறி உயிரிழந்தார். அதில் குற்றவாளி துரைமுத்துவும் பலியானார்.
இந்நிலையில் அந்த மணக்கரை பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான பகுதியாகும். எனவே வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி உதவி வன பாதுகாவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான 10 பேர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் குழு சம்பவம் நடந்த பகுதியினை நேரில் பார்வையிட்டனர். அவர்கள் குற்றவாளிகள் தங்கியிருந்த பகுதி மற்றும் நாட்டு வெடிகுண்டு வெடித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் அதன் அறிக்கையை தமிழக அரசு மற்றும் மத்திய அரசிற்கு சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்த பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் எனவும் சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக கூறப்படும் பாதுகாவலர் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்பவர் என்றும், மேலும் அவர் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படாத தினக்கூலியாக வேலை செய்யும் நபர் எனவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.


