தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைய வலியுறுத்தித் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 1.07.2026 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், ஓய்வூதியர்களுக்குக் காசில்லா மருத்துவச் சிகிச்சையை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும், மாதாந்திர பிரீமியம் தொகையை உயர்த்திய அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வட்டத் தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். வட்டத் துணைத் தலைவர்கள் கமாலுத்தீன், இராமசாமி, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் பெருமாள் வரவேற்புரையாற்றினார். வட்டச் செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் இல. இராமமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் வை. பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் பெ. சாம்பசிவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக வட்டப் பொருளாளர் மாடசாமி நன்றியுரையாற்றினார். இப்போராட்டத்தில் தூத்துக்குடி வட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


