மருதூர் மேலக்காலை தூர் வாரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணியில் 7 வது அணைக்கட்டு மருதூர் அணைக்கட்டு. இதில் மருதூர் மேலக்கால்வாய் மிக நீளமான கால்வாய். குட்டைக்கால் குளம், கொள்ளீர்குளம் , செய்துங்கநல்லூர் குளம், நாட்டார்குளம், தூதுகுழி குளம், கருங்குளம், பெட்டை குளம், கிருஷ்ணன்குளம், வீரளபேரி குளம், கால்வாய் குளம், தென்கரை குளம், நொச்சிகுளம், முதலாம்மொழி குளம், வெள்ளிக்காய்யூரணி குளம், தேமாங்குளம், புதுக்குளம் உள்பட பல குளங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகிறது. சாத்தான்குளம் பகுதியில் உள்ள வறட்சியை போக்க கூடிய சடையனேரி, புத்தன்தருவை குளங்களுக்கும் மழைக்காலங்களில் இங்கிருந்து தான் கொண்டு செல்லப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இந்த கால்வாயில் கூடுதல் தண்ணீர் எடுக்க முடியவில்லை என சுமார் 25 கோடி ரூபாயில் பல்வேறு மராமத்து பணிகள் நடத்தப்பட்டது. ஆனாலும் போதிய அளவு தண்ணீர் கொண்டு செல்லும் அளவுக்கு இந்த கால்வாய் இல்லை.
இக்கால்வாயில் தற்போது அமலை செடிகள் அடர்ந்து காணப்படுகிறது.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும் போது, சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பினை கொண்டது மருதூர் மேலக்கால்வாய். இக்கால்வாய் சீரமைக்க பலகோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் போதிய தண்ணீர் எடுக்க முடியவில்லை. பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்த போது அந்த தண்ணீர் முறையாக குளங்களுக்கு போய் சேரவில்லை. காரணம் இந்த கால்வாயில் ஆங்காங்கே அடர்ந்து காணப்படும் அமலை செடி ஒரு காரணம் தான். எனவே பிசான சாகுபடிக்கு தண்ணீர்திறக்கும் முன்பு அமலை செடியை அகற்ற வேண்டும். மேலும் தூர்ந்துகிடககும் கால்வாயை தூர்வாரி, கரை யோரத்தில்இருந்து முள்செடிகளை அகற்ற வேண்டும் என்று கோரிககை விடுத்தனர்.
தாமிரபரணியில் கார், முன்கார், பிசானம் ஆகிய மூன்று சாகுபடியும் தரக்கூடிய ஓரே இடம் மருதூர் மேலக்கால்வாய். எனவே இந்த கால்வாயை சீராக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.