தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 1,007 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. மாவட்டத்தில் மொத்தம் 12 பஞ்சாயத்து யூனியனில் உள்ள 174 வார்டு உறுப்பினர், 17 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், 403 பஞ்சாயத்து தலைவர், 2 ஆயிரத்து 943 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆக மொத்தம் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 1,542 பதவிகளுக்கும், 2வது கட்டமாக 1,995 பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி, “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு 9 ஆயிரத்து 807 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 135 வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 903 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். 1007 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 7ஆயிரத்து 762 பேர் இறுதி வேட்பாளர்களாக 2 ஆயிரத்து 523 பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்” என்றார்.


