கருங்குளம் பகுதியில் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் வாழை மரங்களால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கருங்குளம் பகுதியில் மருதூர் மேலக்கால் மூலமாக பாசன வசதி பெற்ற வருகின்றன. இப்பகுதியில் குட்டைகால் குளம், முத்தாலங்குறிச்சி குளம், கொள்ளீர்குளம், நாட்டார்குளம், செய்துங்கநல்லூர் குளம், தூதுகுழி குளம், கருங்குளம், பெட்டைகுளம், கிருஷ்ணன்குளம், வீரளபேரி குளம், கால்வாய் குளம் உள்பட பல குளங்கள் மூலமாக சுமார் 2 லட்சம் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன. ரச கதலி, நாடு, தொழுவான் கோழிகோடு உள்பட பல ரக வாழைகள் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர். மருதூர் மேலக்காலில் வாழைக்கு ஒரளவு தண்ணீரு திறப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் வாழை பயிரிட்டனர். ஆனால் தொடர்ந்து தண்ணீர் வராமல் வற்றி விட்டது. இதற்கிடையில் ஒரளவு கிணற்றில் இருந்தும் போல் மூலமாகவும் நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்து வந்தனர். அந்த விவசாயமும் கடந்த 15 நாள்கள் அடித்த கடுமையான வெயிலால் வற்றி விட்டது. இதனால் தற்போது பூத்து காய்க்கும் தருவாயில் உள்ள வாழை மரம் அப்படியே வாடி வதங்கிபோய் உள்ளது.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ஏற்கனவே விவசாயிகள் கடன் வாங்கிதான் விவசாயம் செய்து வருகிறார்கள். வாழை பயிரை பொறுத்தவரை அடிக்கும் காற்றில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு வறட்சியில் சிக்கி வாழைகள் வாடி வதங்கி விட்டன. குறிப்பாக சுட்டெரிக்கும் வெயிலில் கிணற்றில் உள்ள தண்ணீர் வெகுவாக குறைந்து விட்ட காரணத்தினால் மேற்கொண்டு மோட்டார் மூலம் கூட தண்ணீர் எடுக்க முடியவில்லை. எனவே போதிய மழை பெய்தால் மட்டுமே வாழையை காப்பாற்ற முடியும் என்றார்.
இந்த பகுதியில் பிசானம் , கார், முன் சாகுபடி என மூன்று சாகுபடிகள் நடந்து வந்தது. தற்போது பிசான சாகபடி மட்டுமே நடந்து வருகிறது. அதுவும் தற்போது மழை தண்ணீர் இல்லாமல் பொய்த்து போகும் வாழை பயிர் நிலமையை கண்டு விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.