தென் திருப்பதி என்று போற்றப்படும் கருங்குளம் வகுளகிரி சேத்திரத்தில் இருக்கும் வெங்கிடாசலபதி கோயிலில் சித்திரா பௌர்ணமி விழா மிகசிறப்பு பெற்றதாகும் . இந்த விழாவை முன்னிட்டு 10 ந்தேதி தேங்காய் சாத்தி பந்தல் கால் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் தினமும் அவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.
10 ம் நாள்திருவிழாவை முன்னிட்டு 19 ந்தேதி காலை 8 மணிக்கு உத்சவர் தயாருடன் பல்லக்கில் எழுந்தருளி புதுமண்டபம் சேர்ந்தார். அதன் பின் 10 மணிக்கு வெங்கடாசலபதி பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஸ்ரீனிவாசருக்கு நவ கலச திருமஞ்சனம் திருவாராதனம் கோஷ்டி நடந்தது. இரவு 11 மணி அளவில் உத்சவர் ஸ்ரீனிவாசர் பொன்னிற சப்பரத்தில் மலையிறங்கினார். பின் பெருமாள் கோயிலில் வந்து தன்தரையை அடைந்தார். பக்தர்கள் ஸ்ரீனிவாசருக்கு ஜே.. கோவிந்தா.. கோபாலா என உணர்ச்சி பெருக்கில் கோஷமிட்டனர். பின் அவருக்கு தீபாராதனை நடந்தது. அதன் பனி அவர் ஊர் மக்களுக்கு தரிசனம் தந்தார். வீதி உலா முடிந்த பின்பு 20 ந்தேதி காலை 5 மணிக்கு உத்சவர் ஸ்ரீனிவாசர் தாமிரபரணி கரையை வந்தடைந்தார். அங்கு அவர் வெள்ளை சாத்தி மீன் விளையாட்டு ஆடினார். இதை காண ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் திரண்டனர். காலை 7 மணிக்கு அவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 8 மணி அளவில் பச்சை சாத்தி உத்சவர் பொன்னிற சப்பரத்தில் அங்கிருந்து கிளம்பினார். அவர் மலை அடிவாரத்துக்கு வந்தார். அவருக்கு அங்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் தேங்காய் உடைத்து வணங்கி நின்றனர். அதன் பின் அவர் மலையேறும் வைபவம் நடந்தது. இதற்காக பக்தர்கள் கண்ணீர் மல்க தங்கள் தோளில் சுமந்து மலையேறினார். இதை ஆர்வத்துடன் கண்டு கழித்த பக்தர்கள் பகவான் மேலே ஏறியவுடன் கோவிந்தா கோபாலா என அதிர கோஷம் போட்டனர். அதன் பின் சுவாமி கோயில் முன்பு வந்து ஆட்டமிட்டார். பக்தர்கள் ஆர்வத்துடன் கைதட்டி ஆராவாரம் செய்தனர். அதன் பின் அவருக்கு தீபாரதனை நடந்தது. அதன் பின் 11மணிக்கு பல்லக்கில் ஆஸ்தானம் ஏறினார். ஸ்ரீவைகுண்டம் தலத்தார் ராஜப்பா வெங்கசடாச்சாரி உள்பட பலர் கலந்துகொண்டனர். தரிசனத்திற்காக முதல் நாள் இரவும், மறுநாள் பகலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வகுளகிரி சேத்திரம் என அழைக்கப்படும், கருங்குளம் மலை கருடனே மலையாக அமர்ந்தாக ஐதீகம்.இங்குள்ள பெருமான் உருவமற்ற சந்தன கட்டையில் உள்ளார். இதனால் ஹரியும் சிவனும் ஒன்று என உலகத்திற்கு உணர்த்தும் வண்ணம் உள்ளார். இத்திருவிழாவில் சுவாமி சப்பரத்தினை சுமக்க சென்னை, மும்பை , கொல்காத்தா உள்பட வெளிநாடுகளில் இருந்து கருங்குளத்தினை பூர்வீகமாக கொண்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள். ஆனால் பகவான் சப்பரத்தினை தோளில் சுமந்து கண்ணீர் மல்க அவர்கள் கீழே இறக்குவதும், மறு நாள் மலை மீது ஏற்றுவதும் அற்புத நிகழ்வாகும். பகவான் சப்பரத்தினை சுமப்பது பெரும் பாக்கியம் என பலர் சித்திரா பௌர்ணமி அன்று தங்களது பூர்வீக ஊரான கருங்குளம் நோக்கி வருகிறார்கள். சப்பரம் சுமக்கும் வேளையில் கால் இடறினால் கூட பெரும் விபத்து ஏற்பட்டு விடும். ஆனாலும் பகவான் புண்ணியத்தில் இதுவரை எந்தவொரு விபத்தும் ஏற்படவில்லை என பக்தர்கள் பெருமிதமடைகிறார்கள்.