கருங்குளம் பகுதிக்கு மணிமுத்தாறு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் ஒன்றியத்தில் மணிமுத்தாறு 3 வது மற்றும் 4வது ரீச் பாசன பகுதிகள் உள்ளன. இந்த பாசனம் மூலமாக சாத்தனேரி குளம், கிருஷ்ணன் குளம், வெட்டிகுளம், தீராத்திகுளம், இலுப்பைகுளம், தெற்குகாரசேரிகுளம், கிளாக்குளம், அரசர்குளம், வல்லகுளம், கோவை குளம், திருவரங்கநேரி குளம், புதுக்குளம், மல்லல் குளம் உதயநேரிகுளம், அரியநாயகி புரம் குளம் உள்பட பல குளங்கள் பாசனத்தில் உள்ளன. இதில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தற்போது கிணற்று பாசனத்தினை வைத்து இந்த பகுதி மக்கள் நடுவை பணியை ஆரம்பித்து விட்டனர். ஆனால் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்றால் தண்ணீர் வேண்டும்.
இதுகுறித்து சின்னார்குளத்தினை சேர்ந்த விவசாயி பட்டாணி கூறும் போது, கருங்குளம் ஒன்றியத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் மணிமுத்தாறு 3 வது மற்றும் 4 வது ரீச் மூலமாக பயனடைந்து வருகிறது. இந்த ஆண்டு மணிமுத்தாறு அணை 100 அடியை தாண்டி விட்டது. இங்கு 80 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் விவசாயத்துக்கு எங்கள் பகுதிக்கு திறக்க வேண்டும். இதை நம்பி எங்கள் விவசாயிகள் கிணற்று தண்ணீரை கொண்டு நாற்று பாவி விட்டார்கள். மணிமுத்தாறு தண்ணீரை திறந்து விட்டால், கூடுதல் பகுதியில் மக்கள் விவசாயம் செய்வார்கள். எனவே உடனடியாக மணிமுத்தாறு தண்ணீரை திறந்து விட வேண்டும் என அவர் கூறினார்.
மணிமுத்தாறு அணையை திறந்து 3 வது மற்றும் 4 வது ரீச் பகுதிக்கு உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மணிமுத்தாறு அணை மிக வித்தியாசமான அணையாகும். இந்த அணையை முதல்வராக காமராஜர் இருந்த போது கட்டினார்கள். பச்சையாற்றின் ஒரு பகுதி தண்ணீர் மணிமுத்தாறு தண்ணீரை சேகரித்து இந்த 118 கொள்ளவு கொண்ட அணை கட்டப்பட்டது. 80 அடிக்கு மேலே தண்ணீர் இருந்தால் ஒரு வருடம் 1 வது மற்றும் 2 வது ரீச் பகுதிக்கும், மறு வருடம் 3 வது மற்றும் 4 வது ரீச் பகுதிக்கும் தண்ணீர் விடுவது வழக்கம். இந்த வருடம் 3 வது மற்றும் 4 வது ரீச்சிக்கு தண்ணீர் விடுவது முறை. எனவே விவசாயிகள் மணிமுத்தாறு தண்ணீரை நம்பி விவசாயத்தினை ஆரம்பித்து உள்ளனர்.