தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நங்கைமொழி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்ததில் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்து நின்றதும் பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் பேருந்தின் மீது திடீரென கல்வீசி தாக்கினார். இதையடுத்து அங்கு வந்த நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பேருந்து மீது அவர் கல்வீசினார்.
இதில், 2 பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகளும் உடைந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து டிரைவர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுவதால் அவரை, விசாரணைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.