தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் இடையே சுமூகமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் பருமணி உப்பு பண்டல் ஒன்றுக்கு ரூ.1.20 கூலி உயர்வு, தூள் உப்பு பண்டல் ஒன்றுக்கு ரூ.1.80 கூலி உயர்வு என்று கூலி உயர்வு நிர்ணயிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயரும், உப்பு பண்டல் கட்டும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவருமான ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு பேசியதாவது: தொழிலதிபர்களும் தொழிலாளர்களும் இரு கண்கள் போன்றவர்கள்; இருதரப்பும் இணைந்து பணியாற்றினால்தான் தொழில் வளர்ச்சி அடையும்.
எந்தவொரு தொழிலையும் முறையாகச் செய்யும்போதுதான் அந்தத் தொழிலுக்கும் தொழிலாளர்களுக்கும் மரியாதை கிடைக்கும். தூத்துக்குடியிலிருந்துதான் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கும் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலை இருந்தது. தற்போது பிற மாநில உற்பத்தியால் சற்று தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், பழைய நிலையை மீட்க எனது முழு ஒத்துழைப்பு இருக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் தலைவர் பொன்பாண்டி, செயலாளர் தேன்ராஜ், பொருளாளர் ரெங்கநாதன், உப்பு பண்டல் கட்டும் தொழிலாளா் சங்க செயலாளா் கோட்டுராஜா, திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன் மற்றும் தொழிலாளர் சங்கம், கட்சிப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


