ஆதிச்சநல்லூரில் 6ம் கட்ட அகழாய்வு நாளை தொடங்குகிறது. இதனால் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில். சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தையது தாமிரபரணி நாகரீகம். இந்தியாவில் முதல் முதலில் அகழாய்வு நடந்த இடமும் ஆதிச்சநல்லூர் தான். ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜாகோர் 1876 ல் இங்கு ஆய்வு செய்து கிடைத்த பொருள்களை பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் கொண்டு காட்சிபடுத்தினார். 1902ல் அலெக்ஸாண்டனர் ரியா என்பவர் இங்கு ஆய்வு செய்து கிடைத்த பொருள்களை சென்னை அருங்காட்சியகத்தில் கொண்டு வைத்தார். அவரின் நீண்ட அறிக்கைத் தான் இன்றைக்கு ஆதிச்சநல்லூரை உலகமே ஊற்று நோக்க வைத்துள்ளது.
இதற்கிடையில் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் சார்பில் தியாக சத்தியமூர்த்தி தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. எனவே இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மீண்டும் இந்திய அரசு அகழ்வாய்வை ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ள வேண்டும். 2004 நடந்த ஆய்வின் அறிக்கையை வெளியிட வேண்டும். இங்கு கிடைத்த பொருள்களை இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சி படுத்த வேண்டும் என கோரியிருந்தார்.
இந்நிலையில் மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணிக்கரையில் உள்ள இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற்று 31.01.2020 அன்று தொடங்கியது.
இதற்காக ஆதிச்சநல்லூரில் உள்ள புளியங்குளம் பாண்டிய ராஜா கோயில் அருகில் 50க்கு 50 மீட்டரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தினை தேர்வு செய்து அந்த இடத்தில் சுத்தம் செய்தனர். பின்னர் அந்த இடத்தில் தரையில் ஊடுருவும் ரேடார் என்ற கருவி மூலம் பார்வையிட்டனர்.
இதே போல் சிவகளையில் உள்ள பரம்பில் மூன்று இடத்தில் அகழாய்வுக்கு ஆயத்த பணி நடந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் தமிழ் ஆர்வலர்கள் சோர்வடைந்தாலும் விரைவில் பணி தொடங்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்து நின்றனர். இதற்கிடையில், நாளை (திங்கள்கிழமை) அகழாய்வு பணிகள் துவங்க உள்ளது. காலை 9 மணிக்கு துவங்கும் இந்த அகழாய்வு பணியினை தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் துவக்கி வைக்கிறார்.