ஆதிச்சநல்லூர் பரம்பில் இரவில் குழி தோண்டி ஜெ.சி.பியால் முதுமக்கள் தாழிகள் உடைந்த காரணத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆதிச்சநல்லூர் மத்திய பட்ஜெட்டில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதுபோல் மாநில தொல்லியல் துறை அமைச்சர் ம.பாண்டியராஜன் ஏற்பாடில் ஆதிச்சநல்லூரில் ஆகழாய்வு நடைபெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூர் பாண்டுராஜா கோயில் அருகில் அகழாய்வு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தேர்வு செய்யப்பட்ட இடத்தின் பக்கவாட்டில் முள்வேளிகள் அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு குழி தோண்டியுள்ளனர். அதில் சுமார் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்துள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆதிச்சநல்லூர் குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, 114 ஏக்கரில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யும் இடத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி நடந்தது. இதில் மேல் பகுதியில் பெரும்பான்மையான இடத்தில் வேலி அமைத்து முடித்துவிட்டனர். இதற்கிடையில் முதுமக்கள் தாழி இருக்கும் இடம் என தற்போது அகழாய்வு குழுவினர் தேர்வு செய்த இடத்தில் ராத்திரியோடு ராத்திரியாக ஒப்பந்தகாரர்கள் வேலி அமைக்க குழி தோண்டி உள்ளனர். இதில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் உடைந்து விட்டது. அப்போது அங்கு வந்த சாத்தான்குளம் கதிரவன் என்ற சமூக ஆர்வலர் தடுத்து நிறுத்தியுள்ளார். அதையும் மீறி அந்த இடத்தில் அவர்கள் குழி தோண்டி உள்ளார்கள். இயந்திரம் மூலம் குழி தோண்ட அனுமதியும் இல்லை. இதனால் இயந்திரம் மூலம் தோண்டும் பணியை நிறுத்தி மக்களை கொண்டு முதுமக்கள் தாழிகள் உடையாமல் குழி தோண்டி வேலி அமைக்கும் பணியை நடத்த வேண்டும் என அவர் கூறினார்.
இயந்திரம் மூலமாக ஆதிச்சநல்லூரில் எந்த அனுமதியும் இல்லாமல் குழி தோண்டிய காரணத்தினால் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபோன்று வேலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தொடர்ந்து வேலை செய்ய ஆட்களை கொண்டு முள்வேலிகள் அமைப்பதற்கு தோண்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.