கருங்குளம் கள்ளிகாடு வயல்வெளிகளில் காட்டு பன்றி அட்டகாசத்தினால் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர்.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள தூதுகுழிக்குளத்துக்கு பாத்தியப்பட்டது கள்ளிகாடு வயல்வெளிகள். இங்கு சுமார் 100க்கு மேற்பட்ட ஏக்கர் பாசன பரப்பு உள்ளது. இதில் நெல், வாழை, பூ பயிர்கள் இடப்படும். இதில் தற்போது தண்ணீர் இல்லாத காரணத்தினால் நெல் விளைச்சல் இல்லை. இங்கு விவசாயிகள் போர் தண்ணீர் மூலமாக வாழை மற்றும் பூ பயிர்கள் செய்து வருகிறார். வாழையில் கதலி, நாடு, கற்பூர வள்ளி, சக்கை போன்ற வகைகளையும், பூ பயிரில் ரோஜா,டெல்லி பூ போன்ற பூ வகைகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் கள்ளி காடு பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வனத்துறைக்கு சொந்தமான காடு ஒன்று உள்ளது. இந்த காட்டில் 100க்கு மேற்பட்ட காட்டு பன்றிகள் உள்ளன. இந்த பன்றிகள் இரவு நேரத்தில் கள்ளிகாடு வயல்வெளிகளுக்குள் புகுந்து வாழைமற்றும் பூ பயிர்களை நாசம் செய்து, தண்ணீர் டியூப்களையும் வெட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கள்ளிகாடு விவசாயி பெருமாள் கூறும்போது, ஏற்கனவே தூதுகுழி குளம் தொடர்ந்து தூர் வாரமால் , மடை சரியில்லாமல் தண்ணீர் தேங்காமல் உள்ளது. எனவே மூன்று போகம் விளைந்த இந்த பகுதி ஒரு போகம் விளையவே கஷ்டப்பட்டு வருகிறது. பல நேரங்கள் காற்று அடித்து வாழை பயிர் இதற்கிடையில் போதிய மழை இல்லாத காரணத்தினால் தற்போது போர் தண்ணீர் மூலமாக விவசாயம் செய்து வருகிறோம். இங்கு காட்டு பன்றிகள் விவசாய நிலத்தினை கிள்ளி எறிந்து நாசப்படுத்தி வருகிறது. கூட்டமாக வரும் காட்டு பன்றிகள் வாழையை சாய்த்து, பூ பயிரை நாசம் செய்கிறது. எனவே விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தினை சீர் செய்ய என்ன செய்ய போகிறோம் என்றே தெரியவில்லை. மேலும் தொடர்ந்து பன்றிகளை கட்டுபடுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
தொடர்ந்து நஷ்டத்தில் சிக்கி தவிக்கும் விவசாயிகள் பன்றிகள் ஏற்படுத்திய நஷ்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வனத்துறையினர் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலத்துக்கு அரசு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


