தூத்துக்குடி மாவட்ட வருவாய் அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் முதலிடம் மற்றும் முக்கிய இடங்களைப் பிடித்து மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மேசைப்பந்து போட்டியில், 19 வயதிற்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் அஜய் மற்றும் தருண் முதலிடம் பிடித்தனர். 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஜாவித் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தையும், ஜாவித் மற்றும் ஸ்நோபன் இரட்டையர் பிரிவில் முதலிடத்தையும் கைப்பற்றி மாநிலப் போட்டிக்குத் தேர்வாகினர்.

தடகளப் போட்டியில், 17 வயதிற்குட்பட்டோருக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் ராஜாசேகர் முதலிடம் பிடித்தார். இறகுப்பந்து போட்டியில், 17 வயதிற்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் அந்தோணி வில்சனும், இரட்டையர் பிரிவில் அந்தோணி வில்சன் மற்றும் கிளாட்சன் சாமுவேல் இணை முதலிடமும் பெற்று சாதனை படைத்தனர்.

மேலும், 14 வயதிற்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டியில் (46-52 கிலோ பிரிவு) ரிஸ்வின் முதலிடமும், 19 வயதிற்குட்பட்டோருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில் ஹரிஹரன் சுதன் இரண்டாமிடமும், 14 வயதிற்குட்பட்டோர் வாள்வீச்சு போட்டியில் டினோ அந்தோணி மூன்றாமிடமும் பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

மாவட்ட அளவில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் தலைமை ஆசிரியர் அமல்ராஜ் ஆகியோர் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த மேசைப்பந்து பயிற்சியாளர் லூர்துசாமி, உடற்கல்வி இயக்குநர் பாக்கியராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான ஹம்பிரி மிராண்டா, மார்ட்டின் ராஜதுரை, மைக்கேல் ஜார்ஜ் புஷ் ஆகியோரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.