குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு உடன்குடி, நெல்லை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வேடப்பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் கோவிலில் கொடியேற்றத்துக்கு பின்னர், விரதமிருக்கும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி வேடம் அணிகின்றனர்.
தசரா விழாவை முன்னிட்டு, உடன்குடி பஜாரில் உள்ள கடைகளில், பக்தர்கள் அணியும் அலங்கார வேடப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. நெல்லை டவுனில் உள்ள கடைகளிலும் தசரா வேடப்பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
காளி வேடம் அணியும் பக்தர்கள் நீண்ட சடைமுடி, கிரீடம், சூலாயுதம், கண்மலர் போன்றவற்றை ஆர்வமு டன் வாங்கி செல்கின்றனர். மேலும் சிவன், பார்வதி, விநாயகர், முருகபெருமான், அனுமர், நாராயணர், ராமர், லட்சுமணர் போன்ற வேடம் அணியும் பக்தர்களும் வேடப்பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
சிலர் தங்களுக்கு ஏற்ற வேடப்பொருட்களை செய்து தருமாறு ஆர்டர் கொடுத்து செல்கின்றனர். காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு வேடப்பொருட்கள் மொத்த மாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.


