தூத்துக்குடி கீழ அலங்காரத்தட்டு புனித அலங்கார உபகார அன்னை ஆலய 275-ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கீழ அலங்காரத்தட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித அலங்கார உபகார அன்னை ஆலயத்தின் 275-ஆம் ஆண்டு திருவிழாவின் தொடக்க நாளான நேற்று மாலையில் சிறப்பு ஜெபமாலை பிரார்த்தனை, பவனி, திருப்பலி மற்றும் மறையுரை ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து, இடிந்தகரை பங்குத்தந்தை அருட்தந்தை பெஞ்சமின் டிசூசா தலைமையில், கீழ அலங்காரத்தட்டு பங்குத்தந்தை அருள்பணி விமல்சன், ஏரல் பங்குத்தந்தை அருட்தந்தை ரவீந்திரன் பர்னாந்து (மறையுரை), குருஸ்புரம் பங்குத்தந்தை அருட்தந்தை கிஷோக் ஆகியோர் முன்னிலையில் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மந்திரித்து, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது “மரியே வாழ்க” என்ற இறைமக்களின் பக்திக் கோஷங்களுக்கு இடையே திருவிழாக் கொடி பறக்கவிடப்பட்டது.
திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறவுள்ளன.
செப்டம்பர் 26 மாலையில் புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் தலைமையில், புனித யூதா ததேயு திருத்தல அதிபர் அருட்தந்தை அருமைநாதன் மற்றும் மண்ணின் மைந்தர் அருட்தந்தை லிவிங் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு ஆராதனையும் மறையுரையும் நடைபெறும்.
செப்டம்பர் 27 திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி காலை 6:30 மணிக்கு ஆயர் இல்ல அருட்தந்தை X.D. செல்வராஜ் தலைமையில் நடைபெறுகிறது. இதில் ஆயர் இல்ல அருட்தந்தை ஜேசுதாஸ் பர்ணாந்து, தெர்மல் நகர் புனித தாமஸ் பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜேசுராஜா ஆகியோர் பங்கேற்றுத் திருப்பலியை நிறைவேற்றுகின்றனர்.

கூட்டுத் திருப்பலியைத் தொடர்ந்து அன்னையின் அலங்கரிக்கப்பட்ட சப்பரத் திருவுருவப் பவனி வீதியுலாவாக நடைபெறுகிறது.மாலை நேரத்தில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர்வாதம், திருவிழாக் கொடியிறக்கம் மற்றும் மறைக்கல்வி மன்றத்தின் கலை நிகழ்ச்சிகளுடன் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுத் திருவிழா நிறைவுபெறும்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை விமல்சன் தலைமையில் கார்மல் சபை அருட்கன்னியர்கள், பங்கு மேய்ப்புப் பணிக்குழு மற்றும் பங்கு இறைமக்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.


