தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தைச் சேர்ந்த 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு மானிய விலையிலான செயற்கைக்கோள் தொலைபேசிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்.
தருவைகுளம் கிராமத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விஷா மகாஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், 74 மீனவர்களுக்குச் செயற்கைக்கோள் போன்களை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பேசியதாவது: “தருவைகுளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 மீனவர்களுக்குச் செயற்கைக்கோள் போன்கள் வழங்கப்படுகின்றன. ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் சிம்கார்டின் மொத்த மதிப்பு ரூ.1,34,166 ஆகும். இதில் 40 சதவீதம் தொகையை அரசே மானியமாக வழங்குகிறது.
தருவைகுளம் கடலோரப் பகுதி இயற்கைச் சீற்றங்களின் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாகும். முன்பு 300 கடல் மைல் தொலைவு வரை மட்டுமே சென்று மீன்பிடித்த மீனவர்கள், தற்போது 1000 கடல் மைல் தொலைவு வரை சென்று மீன்பிடித்து வருகின்றனர். அவசரகாலங்களில் தொடர்பு கொள்ளவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தச் செயற்கைக்கோள் போன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் தருவைகுளம் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.” என்றார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம் மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.


