திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு கோவில் யானை வெள்ளை நிறத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரைச் சிவபெருமான் வெள்ளை யானையில் (ஐராவதம்) திருக்கைலாயத்திற்கு அழைத்து வரச்செய்து காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.இதனை நினைவுகூரும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோவில் யானை தெய்வானையின் உடல் முழுவதும் அரிசி மாவு, திருநீறு பூசப்பட்டது.
உடல் முழுவதும் வெள்ளை நிறமாகக் காட்சியளித்த தெய்வானை யானை கோவிலில் இருந்து புறப்பட்டது. யானையின் பின்னால் சுந்தரமூர்த்தி நாயனார் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, சன்னதி தெரு வழியாக எட்டு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார். அதன்பின்னர் யானையும், சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவிலுக்குச் சென்றனர்.
கோவிலில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் ஆகியோர் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி, வெள்ளை யானையின் பின்னால் உட்பிரகாரத்தில் உலா வந்து மீண்டும் 108 மகாதேவர் சன்னதியை அடைந்தனர். அங்கு வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்தி நாதருக்குச் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இப் பூசைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


