2025-2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இச்சங்கம் மூலம் ஆண்டுதோறும் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, படைப்பாளி ஒருவருக்குத் தலா ₹1,00,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு உதவித்தொகை பெற, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அரசின் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க் மூலமாகவோ அல்லது அதில் உள்ள QR குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்தோ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தங்கள் படைப்பின் இரு நகல்களை வன் நகலாகவும் (Hard Copy), டிஜிட்டல் வடிவத்திலும் (Digital Copy) இணைத்து வரும் 25.08.2026-க்குள் விண்ணப்பிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


