தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இன்று நடைபெற்ற இக்குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர்.
இக்கூட்டத்தில் மூத்த குடிமக்கள் சிரமமின்றி மனுக்களை அளிப்பதற்காகப் பிரத்யேக இடம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு அமர்த்தப்பட்டிருந்த மூத்த குடிமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் இதர பொதுமக்கள் அளித்த மனுக்கள் என மொத்தம் 483 மனுக்கள் பெறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் சென்று, அவர்களைச் சந்தித்து 27 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இன்றைய கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக மொத்தம் 510 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இக்குறைதீர்ப்பு நாள் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரமணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சாந்தி, உதவி இயக்குநர் (தணிக்கைகள்) சந்திரசேகர் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.


