மேல்மாந்தையில் உள்ள கல்லூரி முன்பு பேருந்துகள் நிற்காமல் செல்வதால் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும், அங்குப் பேருந்து நிறுத்தத்தை முறைப்படுத்தக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை ஈசிஆர் சாலையில் ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் சமுதாயக் கல்லூரி கடந்த 18 ஆண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தற்போது 223 மாணவிகள் படித்து வருகின்றனர்; 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்லூரிக்கு வரும் மாணவிகளும் ஆசிரியர்களும் பேருந்துகளைப் பயன்படுத்தும்போது, பேருந்துகள் கல்லூரிக்கு முன்பு நிற்காமல், ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல்மாந்தை நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.
இதனால், இங்கிருந்து கல்லூரிக்குச் செல்ல வேண்டிய மாணவிகளும் ஆசிரியர்களும் தினமும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு மிகவும் சிரமப்படுகின்றனர். இக்கல்லூரிக்காக 11 ஆண்டுகளுக்கு முன்பே பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி முன்பு பேருந்துகளை நிறுத்தக் கோரி இதற்கு முன் 4 முறை மனுக்கள் கொடுக்கப்பட்டும், அதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி – இராமநாதபுரம் மற்றும் இராமநாதபுரம் – தூத்துக்குடி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக மேல்மாந்தை சமுதாயக் கல்லூரி முன்பு நின்று செல்வதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என இக்கல்லூரி இயக்குநர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் ஒரு புதிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


