கடைகளில் சோதனை என்ற பெயரில் துன்புறுத்த கூடாது என்று தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மூத்த நிர்வாகி பொன் தனகரன், சட்ட ஆலோசகர் தனசேகர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் வருமாறு: தூத்துக்குடியில் ஆய்வு என்ற பெயரில் வியாபாரிகளின் கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தி, வணிகர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் மன அமைதியையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு தடை செய்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் இதர பொருட்களை அவை தயாரிக்கும் உற்பத்தி இடங்களிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு நெகிழி குறித்துக் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மனு அளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தடுக்க மாற்று நடவடிக்கைகள் எடுக்கும்போது, வர்த்தகர் சங்கத்தின் கருத்துகளுக்கு மதிப்பளித்து வணிகர்கள் பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடுகளைச் செய்து தந்த போக்குவரத்து காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
சங்கப் பயன்பாட்டிற்குப் புதிய கணினி ஒன்றை வாங்கி, அதன் மூலம் வியாபாரிகளுக்குச் சொத்து வரி, தொழில் வரி, FSSAI சான்றிதழ், ஜிஎஸ்டி, தண்ணீர் மற்றும் மின் கட்டணம் போன்றவற்றை எளிதாகச் செலுத்த ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் தினசரி நாள் ஒன்றுக்கு 50 முறைக்கு மேல் இரண்டாம் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வாக, கீழூரில் இயங்கி வரும் ரயில் மெக்கானிக் செட்டை உடனடியாக மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பொதுச்செயலாளர் தெர்மல் ராஜா வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் விக்னேஷ் சங்கக் கணக்குகளை வாசித்தார். இக்கூட்டத்தில் 60 கிளைச் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் நிறைவாக மாவட்டப் பொருளாளர் நவமணி தங்கராஜ் நன்றி உரையாற்றினார்.


