தூத்துக்குடி தமிழ்ச்சாலையில் இன்று வீசிய சூறாவளிக் காற்று காரணமாகப் பழமைவாய்ந்த அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இச்சம்பவத்தின் போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், இன்று வீசிய சூறாவளிக் காற்று காரணமாக தமிழ்ச்சாலையில் உள்ள சத்யா ஏஜென்சிஸ் அருகில் பழமையான அரசமரம் சாய்ந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமான பொலிரோ ஜீப் வாகனத்தின் மீது மரம் விழுந்ததில், அந்த வாகனம் நசுங்கி ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
மரம் விழுந்ததால் அப்பகுதியில் தற்காலிகமாகப் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், விழுந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் உதவியுடன் மரத்தை முழுமையாக அகற்றிப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


