தூத்துக்குடியில் குமிழ்முனை பதிப்பகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் 9 புதிய நூல்கள் வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள பொ. தங்கம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளியில் குமிழ்முனை பதிப்பகத்தின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ம. ஆரோக்கிய செல்வ சுந்தரி, முத்து ஷீலா, ஆ. தேவராஜ், கிளாரன்ஸ் பீட்டர் மற்றும் ரா. கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி எழுத்தாளர்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியின் தொடக்கமாகப் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒன்பது புதிய நூல்கள் சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டன.
எழுத்தாளர் அன்பரசு எழுதிய “குழந்தைகள் மனிதர்கள் மருத்துவர்கள்” (குறுநாவல்), “தியாகராஜன்” (குறுநாவல்), “நூறு தருணங்கள்” (கவிதைத் தொகுப்பு) மற்றும் “இறப்பு சான்றிதழ்” (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நான்கு நூல்களை ரா. கருப்பசாமி வெளியிட்டார்.
எழுத்தாளர் காட்வின் எழுதிய “வரதட்சணை” என்ற கட்டுரைத் தொகுப்பை முத்து ஷீலா வெளியிட்டார். கவிஞர் வேந்தன் பிரபாகரன் எழுதிய “விரல்களில் அடங்கும் விண்மீன்” என்ற கவிதை நூலைக் கிளாரன்ஸ் பீட்டர் வெளியிட்டார். தொல்லியல் ஆய்வு நூலான, எழுத்தாளர் மா. ஜெயமாரி எழுதிய “கூரான் கோட்டை” என்ற நூலை ம. ஆரோக்கிய செல்வ சுந்தரி வெளியிட்டார்.
நிகழ்வில் கலந்து கொண்ட நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ், போலியோ சொட்டு மருந்து தினத்தை வலியுறுத்தும் விதமாக இரண்டு நிமிடக் கவிதை ஒன்றை வாசித்தார். தொடர்ந்து நூலாசிரியர்கள் தங்களது படைப்புகளின் உருவாக்கம், கருப்பொருள் மற்றும் இலக்கியப் பயணம் குறித்து ஏற்புரை வழங்கினார்கள்.
விழாவில் புலவர் முத்துசாமி பதிப்பகத்தை வாழ்த்தி வாழ்த்துப்பா பாடினார். செரிப், ராஜ்குமார், பிரபாவதி, வள்ளிநாயகி, லோகு உலகம்மாள், அருந்ததி அரசு, பத்மநாபன், கலையின் குரல் சக்திவேல் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை எழுத்தாளர் ரமேஷ் அறிவழகன் தொகுத்து வழங்கினார். நிறைவாகப் பதிப்பகத்தின் குமிழ்முனை சைமன் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி நிறைவுற்றது.


