தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மைப்பணி தனியார்மயமாக்கல் மற்றும் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏஐடியுசி மாவட்டக் குழு சார்பில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒப்பந்த முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், நகராட்சி உள்கட்டமைப்பில் தூய்மைப்பணிகளைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட்டுப் பணியாளர்களைப் பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் 20 பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட ஏஐடியுசி அமைப்பினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


