தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அங்கு நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டறிந்து, தொடர்புடைய பணியாளர்களில் சிலரை பணி நீக்கம் செய்யவும், சிலரை பணியிட மாற்றம் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மொத்தம் 9 அம்மா உணவகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சில உணவகங்களில் முறையான கணக்குகள் பராமரிக்கப்படாமல் முறைகேடுகள் நடப்பதாக மாநகராட்சிக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை அன்று நேரடி சோதனையில் ஈடுபட்டார்.
அம்மா உணவக விதிமுறைகளின்படி, உணவருந்த வரும் பொதுமக்களுக்கு உரிய டோக்கன் வழங்கப்பட்டு, அதனடிப்படையிலேயே உணவுகள் விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட அந்த உணவகத்தில் மக்களுக்கு முழுமையாக டோக்கன் வழங்காமல் முறைகேடுகளில் ஈடுபட்டது ஆய்வில் தகுந்த ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டது. மேலும், அங்குத் தயாரிக்கப்படும் உணவுகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்காமல், விதிகளை மீறி மொத்தமாக வெளிச்சந்தையில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் அம்பலமானது.
முறைகேடுகள் உறுதியானதைத் தொடர்ந்து, அம்மா உணவகப் பொறுப்பு அதிகாரிகளை மேயர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அங்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஊழியர்களில், இந்த டோக்கன் மற்றும் உணவு விற்பனைப் புகார்களில் நேரடியாகத் தொடர்புடைய பணியாளர்களை உடனடியாகப் பணியில் இருந்து நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அத்துடன், அங்குப் பணியாற்றி வந்த இதர பணியாளர்களை உடனடியாக வேறு இடங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் அதிரடி ஆணையிட்டுள்ளார்.


