தாய்லாந்தில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நிகழ்வில் தூத்துக்குடி வரலாற்று ஆய்வுகள் குறித்து தொல்லியல் ஆர்வலர் பெ. ராஜேஷ் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.
தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் உள்ள அசம்ஷன் பல்கலைக்கழகம், சர்வதேச திருக்குறள் அறக்கட்டளை மற்றும் ஆசியவியல் நிறுவனம் இணைந்து நடத்திய தாய் – தமிழ் பண்பாடுகள் மற்றும் வரலாறுகள் தொடர்பான உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில், தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாற்று மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ. ராஜேஷ் செல்வரதி ‘முந்நீர் மேலாண்மையும் பண்டைய முத்து விளை கழனிகளும்’ என்ற தலைப்பில் தனது ஆய்வுக் கருதுகோள்களைத் திறம்படச் சமர்ப்பித்தார். இந்த ஆய்வு, தூத்துக்குடி மாவட்டத்தின் பட்டினமருதூர் (கீழ்ப்பட்டினம்), பனையூர் (வே), கீழக்கரை மற்றும் காயல்பட்டினம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் 1778 ஆம் ஆண்டு இராபர்ட் ஓரம் என்பவரால் வரையப்பட்ட வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்புகளை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
இப்பகுதிகளின் உத்தேச அமைவிடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கடல்சார் புதைபடிமங்கள், இந்திய விலங்கியல் கணக்கெடுப்புத் துறையின் (ZSI) ஆய்வு அறிக்கைகள் மற்றும் பட்டினமருதூர் கள ஆய்வில் கிடைத்த தொல்பொருட்களின் உத்தேசக் காலக்கட்டங்கள் ஆகியவற்றை முதன்மைச் சான்றுகளாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சியின் ‘முத்து விளை கழனி முந்நீர் வரைப்பில்’ என்ற பாடல் வரிகளின் அறிவியல் கூற்றைத் துணையாகக் கொண்டு, பண்டைய தமிழர்களின் முத்து மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் குறித்த மறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரும் நோக்கில் இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டு, மாநாட்டினரின் பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.
இந்தத் தொல்லியல் ஆய்விற்கு உறுதுணையாக இருந்த சென்னையைச் சேர்ந்த யாம் அறக்கட்டளையினருக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட ராஜேஷ் செல்வரதி, தமிழக அரசுக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் பனையூர் கிராமத்தின் கடற்கரைப் பகுதிகளில் கண்டறியப்பட்ட கடல்சார் புதைபடிமங்கள் குறித்து, இந்திய விலங்கியல் துறை – கொல்கத்தா விஞ்ஞானிகள் மேம்பட்ட காலக் கணக்கீடு ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு மிகத் துல்லியமான காலக்கட்டத்தைக் கண்டறிய விரும்புகின்றனர். எனவே, விஞ்ஞானிகளின் இந்தக் கோரிக்கைக்குத் தேவையான அனுமதிகளையும் உத்தரவுகளையும் வழங்கி, அடுத்தகட்ட முன்னெடுப்புகளைத் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாகச் செய்திட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


