தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைச்சர் ஸ்ரீநாத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்..
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, ஆல் இந்தியா சென்ட்ரல் கவுன்சில் ஆஃப் டிரேட் யூனியன்ஸ் (AICCTU) தொழிற்சங்கத்தின் முக்கியத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் நேரில் அளித்தனர்.
அந்த மனுவில், “AICCTU தூய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைவரான பொன்ராஜ் என்பவரை மாநகராட்சி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ள சூழலில், அவரை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் உடனடியாகப் பணியில் அமர்த்துவதற்குத் தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தூய்மைப் பாரத ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்குச் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதுவரை அதனை வழங்காமல் இழுத்தடித்து வரும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த நிறுவனமான அவர்லாண்ட் நிர்வாகத்தின் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் துறை ரீதியாக மேற்கொள்ள வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு, முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இதர நலத்திட்ட உதவிகளைத் தொய்வின்றி வழங்க மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிற்சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளைக் கனிவோடு கேட்டறிந்த அமைச்சர், இந்த விவகாரங்கள் தொடர்பாகத் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவன அதிகாரிகளிடம் முறைப்படி விசாரணை நடத்தி, பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.


