நெல்லை மாநகர் சிறப்புக்குரிய நகர். தென்னிந்தியாவில் தாமிரபரணி தண்ணீர் குடித்தவர் களின் வாரிசுகள் தான் இன்று உலக தொழில் நுட்பம் உள்பட பல வகைகளில் சாதனை புரிந்து வருகிறார்கள். சென்னை மாநகரில் கூட பல அற்புத பொது தலங்களை நிறுவியவர்களில் மிக முக்கிய மானவர்கள் நெல்லை மண்ணுக்கு சொந்த காரர்களே.
இவர்கள் வாரிசுதான் சென்னையில் முதல் முதலில் தனியார் மருத்துவமனை ஆரம்பித்து குறைந்த செலவில் வைத்தியம் பார்த்தனர் என்ற தகவல் நம்மை ஆச்சரியமடைய வைத்தது. இதற்கான குறிப்புகள் நம்மிடம் இல்லை. ஆனால் பிரிட்டிஷ் புவியியல் வல்லுநர் சோமர் செட் பிலேனே என்பவர் தான் எழுதிய Southern India, Its History, People, Commerce and Industrial Resources எனும் நூலில் பதிவிடப்பட்டுள்ளது. அதை பற்றி அறிவதற்காக நாம் பாளையங் கோட்டையில் மகராஜ நகர் வசந்தம் காலனி மல்லிகை இல்லத்துக்கு சென்றோம். அங்கே அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் கட்டளை கைலாசம் வசந்த் அவர்களை சந்தித்தோம். டாக்டர் கட்டளை கைலாசம் வசந்த் அவர்கள். அமெரிக்காவில் பயின்று அங்கேயே மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி மோனாள் தமிழ்துறை தலைவர் கட்டளை கைலாசம். ஓலை சுவடி ஆய்வாளர், நூலாசிரியர். தந்தை வழியிலே இவருக்கு தமிழ் மீதும், தமிழ் நாட்டின் மீதும், தமது பூர்வீகத்தின் மீதும் பற்று அதிகம். எனவே அமெரிக்காவில் தான் டாக்டர் படிப்பு பயின்ற போது அங்குள்ள நூலகங்களை உற்று நோக்குவதை வழக்கமாக கொண்டி ருந்தார். தென் இந்திய நூல்களை எங்கு கிடைத்தாலும் அதை வாங்கி படிப்பார். அப்படிதான் ஒருசமயம் அமெரிக்கா கலிபோர்னியா நூலகத்தில் தமிழ் நாட்டு வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களை தேடிய போதுதான் பொக்கிஷமான இந்த நூல் அவர் கையில் கிடைத்தது-. அந்த நூலில் உள்ள செய்திகளை படித்த பிறகு ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார். காரணம் சென்னை மாநகரில் 1914ல் ஆஸ்பத்திரி நிறுவிய டாக்டர் சங்கர நாராயணன் என்பவர் குளத்தூர் ஜமீன்தார் மகன் என்பதுதான். தங்களது ஜமீன்தார் முன்னோர்களை பற்றி தாங்களே அறிந்திருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேயன் பொக்கிஷமாக அதை பதிவு செய்து வைத்திருக்கார் என்ற போது யாரால்தான் ஆச்சரியப் படாமல் இருக்கமுடியும்.
இது குறித்து டாக்டர் கட்டளைகைலாசம் வசந்த் நம்மிடம் பேசினார்,
இந்திய மருத்துவத்துறையின் வளர்ச்சியில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தென் இந்தியாவின் முக்கிய நகரமான சென்னை நகரில் முதல் தனியார் மருத்துவமனை 1914ல் எங்கள் குளத்தூர் ஜமீன் முன்னோரான டாக்டர் சங்கர நாராயணன் அவர்களால் நிறுவப் பட்டது. இதை வாரிசுகளான நாங்களே மறந்து விட்டோம். குறிப்புகளை கூட சேர்த்து வைக்காமல் விட்டுவிட்டோம். ஆனால் இதற்கான குறிப்புக்கள் சோமர்செட் பிலேனே எனும் பிரிட்டிஷ் புவியியல் வல்லுநர் நூலாக எழுதியுள்ளார். அந்த சமயத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த போது, தனது உதவியாளர் களுடன் தென் இந்தியா நிலப் பரப்பை முழுவதும் பயணம் செய்து பதிவிட்டார். இதற்காகThe Foreign and Colonial Compiling and Publishing Company எனும் பதிப்பகம் ஒன்றை நிறுவினார். அதன் மூலம் தனது புத்தகங்களை வெளியிட்டார். அவர் வெளியிட்ட ஷிஷீutலீமீக்ஷீஸீ மிஸீபீவீணீ, மிts பிவீstஷீக்ஷீஹ், றிமீஷீஜீறீமீ, சிஷீனீனீமீக்ஷீநீமீ ணீஸீபீ மிஸீபீustக்ஷீவீணீறீ ஸிமீsஷீuக்ஷீநீமீs எனும் நூல் சென்னை வரலாற்றின் மேற்கோளாக திகழ்ந்து வருகிறது.
இந்த நூலை தான் கலிபோர்னியா நூலகத்தில் நான் கண்டெடுத்தேன். இதில் தென்னிந் தியாவின் தொழில் நிறுவனங் களின் பதிவுகளில் முதல் தனியார் மருத்துவமனை நிறுவனரான டாக்டர் சங்கரநாராயணன் பற்றி விரிவாக பதிவிட்டுருக்கிறார். அதில் அவர், டாக்டர் சங்கரநாராயணன் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மிகச்சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று 1914 ஆண்டு மருத்துவ பணியை துவங்கினர் என்பது முதல் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவராக பணியாற்றினார் என்பது வரை பதிவிட்டிருந்தார். மேலும் அவர் குறிப்பிடும்போது, இவரது பெரும் திறமையும் புகழும் காரணமாக தனது நோயாளிகளுக்கு தனது சொந்த பொருட்செலவில் மருத்துவமனை நிறுவினார். இந்த மருத்துவமனை பிரமிக்கத்தக்க வகையில் சென்னை பிராட்வே நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்திருந்துள்ளது. இந்த மருத்துவமனை மிகச்சிறந்த அறிவியல் திட்டமிடல்களுடன் மருத்துவ வசதி பெற்றிருந்துள்ளது. 24 உள்நோயாளி படுக்கைகள் இருந்தன. அங்கு மருத்துவம் பெற்ற நோயாளிகள் டாக்டர் சங்கரநாராயணன், உதவியாளர்கள் மற்றும் செவிலியர்களின் திறமை, சீறிய பண்பை பெரிதும் பாராட்டியுள்ளனர். அதை மேலை நாட்டு எழுத்தாளர் மிகச்சிறப்பாக எழுதியுள்ளார். மேலும் மெட்ராஸில் இதைப்போன்று வேறு எந்த நிறுவனமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 1914, இதன் திறப்புவிழா நடந்த போது, 2000கும் அதிகமானோர் இந்த கட்டிடத்தினை காணவேண்டும் என ஆவலோடு திரண்டு கலந்து கொண்டனர். அந்த காலத்தில் இந்த சம்பவம் பிரமிப்பு ஊட்டும் வகையில் இருந்துள்ளது. டாக்டர் சங்கர நாராயணன் ரூபாய் 50,000 செலவில் இந்த சேவைகளை புரிந்துள்ளார். தற்போது இதன் மதிப்பு பல கோடியாகும். மேம்பட்ட மருத்துவ வசதியை பாமரரும் பயன்படும் வகையில் புரிந்த சேவையால் இந்த சமுதாயத்தின் நன்றிக்கு உரியவராக அவரை மாற்றியுள்ளது. மருத்துவர் சங்கரநாராயணனின் தந்தை திருநெல்வேலி மாவட்டத்தின் மிகவும் மதிக்கப்படும் குளத்தூர் ஜமீன்தார் ஆவர் என கட்டுரையாளர் குறிப்பிட்டு இருக்கும் போது என்னை அறியாமலேயே பிரமித்து போய் நின்று விட்டேன். இதைபோன்று திருநெல்வேலி டவுணில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் தெருவில் மூன்றடுக்கில் மருத்துவமனை ஒன்றை துவங்கியுள்ளார். ஆனால் ஏதோ காரணத்தினால் அந்த பணி இடையில் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது இந்த கட்டிடம் மட்டும் கம்பீரமாக காட்சியளிக்கிறது . இதுகுறித்து எனது முன்னோர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். டாகடர்சங்கரநாரயணன் தலைமுறைகளாக, நாங்கள் 15கும் மேற்பட்ட மருத்துவர்கள், இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ சேவை ஆற்றி வருகிறோம். அதில் நானும் ஒருவன் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. என்றார்.
தற்போது 72 வயதான தூத்துக்குடி அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி ஓய்வு டாக்டர் வேலுராமலிங்கம் இந்த ஆஸ்பத்திரியில் தான் தங்கியிருந்து தான் மருத்துவம் கற்றுள்ளார். இவர் ஸ்டன்லி மருத்துவமனையில் மருத்துவக்கல்வி பயின்றாலும் அனுபவ அறிவை கற்றுக்கொண்டது இங்குதான். இவர் குளத்தூர் ஜமீன்தார் குடும்பத்தினை சேர்ந்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் என் தாய்மாமன் என்பதில் எனக்கு பெருமை.
தற்போது சென்னை பிராட்வேயில் டாக்டர் சங்கரநாரயணன் கட்டிய கட்டிடம் பல அடுக்கு மாடி குடியிருப்பாக மாறிவிட்டது. ஆனாலும் கூட அவர் செய்த அந்த செயலை குறிப்புகளாகவும் படங்களாகவும் குறிப்பிட்ட சோமர்செட் பிலேனே அவர்களை நாம் பாராட்டாமல் இருக்கமுடியுமா?.
எனவே டாக்டர் கட்டளை கைலாசம் வசந்த் அவர்கள் நம்மிடம் சேகரித்து கொடுத்த புகைப்படங்களை ஆர்வத்தோடு வாங்கி நமது புகைப்பட கமராவில் படமெடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
( நதி வற்றாமல் ஓடும்)


