மனித வாழ்வின் முதல் கால் பகுதியே, முழுமையான இளமைப்பருவம் தான்.அந்தப் பருவத்தில் தோன்றும் மிக அழகிய மற்றும் இயல்பான உணர்வுதான் காதல்.
கல்வியோடு வாழ்வையும் கற்றுத் தேரும் பருவமாக விளங்குவது இப்பள்ளி மற்றும் கல்லூரிப் பருவமே. எனவே, மாணவப் பருவத்தில் காதல் தோன்றுவது இயல்பானது மட்டுமல்ல,மனித வளர்ச்சியின் ஒரு கட்டமாகவே பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
சமூகப் பார்வையும் உருவாகும் மறைமுகச் சிக்கல்களும்
ஆனால் இன்றுவரை, குழந்தைகளின் காதல் உணர்வும் அதனால் உருவாகும் இவர்களது நடத்தை மாற்றங்களும் ஒழுக்கக் கேடாகவே சமூகத்தால் பார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, பெற்றோர்களும் ஆசிரியர்களும் காதல் வயப்படும் குழந்தைகளைப் புரிந்து கொள்ளாமல், குற்றப்படுத்தி, தடை விதிப்பவர்களாக மாறிவிடுகின்றனர்.
இயல்பாக தங்களுக்குள் உருவாகும் இயல்பான இந்த வளர்ச்சி மாற்றத்தைக் கட்டுப்படுத்தவோ, அதிலிருந்து விலகி ஓடவோ முடியாத குழந்தைகள், அதற்குப் பதிலாக மாற்று வழிகளைத் தேட ஆரம்பிக்கின்றனர்.
தங்களது உணர்வுகளைப் பெற்றோரிடம் மறைத்து, காதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போல நடந்து கொள்கிறார்கள்.
இதனால் வீட்டில் ஒரு முகம், பள்ளியில் இன்னொரு முகம் என்ற இந்த இரட்டை வாழ்வே இப்பருவத்தின் அடையாளமாக மாறிவிடுகிறது.
கல்வி நிறுவனங்களிலேயே பகலின் பெரும்பகுதியை செலவிடும் இப்பருவத்தினருக்குப் பெரும்பாலும் கல்வி அவ்விடங்களே காதலுக்கான தளங்களாகி விடுகின்றன.
எனவே
காதலால் ஏற்படும் பிரச்சினைகளைச் சீர்செய்ய பெற்றோர்களை அழைத்து பேசும்போது,
“என் குழந்தையால் இப்படிச் செய்யவே முடியாது” என்றே அவர்கள் வாதிடுகின்றனர்.
இதனால் மாணவர்களின் பிரச்சினைகள் தீர்வடைவதற்குப் பதிலாக மேலும் சிக்கலாகின்றன.
புரிதலின்வடிவமும் அதன் எதிர்மறை விளைவுகளும்
“எங்களுக்கெல்லாம் அந்த வயதில் காதல் என்றால் என்னவென்றே தெரியாது”
“படிக்க வேண்டிய வயதில் காதலா?”
“படித்து வேலைக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்”
என்ற பெற்றோரின் கடினமான வார்த்தைகளும்,
ஆசிரியர்களின் கடும் கண்டனங்களும்
மாணவர்களைப் பெரும் குழப்பம், அச்சம், குற்ற உணர்வு ஆகியவற்றில் தள்ளிவிடுகின்றன.
பசி, தூக்கம், மகிழ்ச்சி,கவலை போலவே காதலும் ஒரு இயல்பான உணர்ச்சி.அதற்கான வடிகால்களை அந்த வயதில் மனம் தேடத்தான் செய்யும்.
எதிர்பாலினத்தவரின் மீது ஏற்படும் ஈர்ப்பும், அதீத அழகுணர்ச்சியும் தவறானவை எனக் கருதப்படும் மனப்பான்மை, அந்தப் பருவத்தைக் கடந்து வந்த பெரியவர்களிடமே இருப்பதுதான் ஆச்சரியம்.
அக்கறையின் பெயரில் குழந்தைகளைப் புரியாமல் ஒடுக்குவது, அவர்களை மேலும் தனிமைப்படுத்துகிறது.
இப்பருவத்தினரின் காதல் உணர்வை மிகக் கவனமாக கையாண்டு, சரியான முறையில் நெறிப்படுத்தினால் மட்டுமே அவர்களின் ஆளுமை ஆரோக்கியமாக வளர முடியும்.
இல்லையெனில், தாழ்வு மனப்பான்மையும் குற்ற உணர்வும் அவர்களது இயல்பாகவே மாறிவிடும்.
நெறிப்படுத்தும் அன்பே ஆரோக்கியமான தீர்வு
இன்றைய சூழலில் பத்து வயதிலிருந்தே காதல் உணர்வு குழந்தைகளுக்குள் எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது.
சமூக ஊடகங்களும், திரைப்படங்களும் அவர்களுக்குள் காதல் உணர்வைத் தூண்டுவதில் பெரும் பங்காற்றுகின்றன. இவற்றைத் தவிர்ப்பது என்பது கூடாத காரியம்.எனவே
இந்தச் சூழலைப் புரிந்து கொண்டு, சரியான வழிகாட்டுதலுடன் அவர்களை வழிநடத்த வேண்டுமே தவிர,
“காதலே உனக்கு வரக்கூடாது” என்ற அடக்குமுறைகள் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
‘சிறுநீர் கழிக்க வேண்டும்’ என்ற உணர்வு இயல்பானது.
அதைத் தடுக்க முயல்வது எவ்வளவு நியாயமற்றதோ,
அதேபோலத்தானே எல்லா இயல்பான உணர்வுகளும் இருக்க முடியும்…!!?
அதை நாம்
எப்படி புரிந்து கொள்கிறோம்,
எப்படி கையாளுகிறோம்,
எப்படி பொறுப்பேற்கிறோம்
என்பதே மனிதனை மனிதனாக்கும் சரியான வளர்ச்சிமுறைகள்.
இவற்றை இளம் பருவத்தினரை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவசியம் உணர்ந்து செயல்பட்டாக வேண்டும்.
பெற்றோரால் புரிந்து கொள்ளப்படாத குழந்தைகள், தங்களைப் போன்ற இயல்புள்ள சக மாணவர்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்குகின்றனர்.
அவர்களும் இதே காரணத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தால், அந்த நட்பு இன்னும் தீவிரமாகிறது.
பள்ளிகளில் படிப்பில் கவனமற்றதாகத் தோன்றும் மாணவர்களைப் புரியாமல் குற்றம் சாட்டுவது, அவர்களை கற்றலிலிருந்தே விலகச் செய்கிறது.இதனாலேயே
”வாழ்க்கையே காதலுக்காகத்தான்”என்ற தவறான முடிவிற்கு இளம் பருவத்திலேயே வந்துவிடுகின்றனர்.
அத்துடன், தங்களைப் புரிந்து கொள்ளாத சமூகத்தின் மீது வெறுப்புணர்வும் கொள்கின்றனர்.
இதனால் ஏற்படும் மறைமுக சமூகத் தீங்குகள் அளவிட முடியாதவை…!
எனவே இப்பருவத்தினர் எதிர்பார்ப்பது
தங்களைப் புரிந்து கொண்டு, அன்போடு வழிநடத்தும் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் தான்.
காதலுணர்வை நெறிப்படுத்த முடியும்.
முதலில் பெற்றோர், இப்பருவத்தினரின் செல்லத் தோழர்களாக மாற வேண்டும்.
பெற்றோரிடம் தங்களது எல்லா பிரச்சினைகளையும் திறந்த மனதுடன் கூறும் சூழலை உருவாக்கித் தர வேண்டும்.
இதுவே அறிவார்ந்த விழிப்புநிலை செயல்பாடு.
வாழ்வின் மிக அழகிய இளமைப் பருவத்தை சிறப்பாக அவர்கள் கடக்கவும் ,கற்றுக் கொள்ளவும் சிறந்த வழிகாட்டுதல் அவசியமானது.
அவர்களது உணர்வுகளை உதாசீனம் செய்யாமல் சரியான முறையில் நெறிப்படுத்தி எதார்த்தமாக வாழ வழிவகுப்போம்.
அப்போது தான், தங்களைப் போன்றேஅறைகுறை அறிவோடு வளரும் சக நண்பர்களின் தவறான ஆலோசனைகளில் சிக்கிக் கொள்ளாமல்
ஆரோக்கியமான பாதையில் வளரச் செய்ய முடியும்


