காசிராஜன் தன் கையிலிருந்த கண்டக் கோடாரியால் லோன்துரையின் வலது கையில் ஓங்கி வெட்டினான். அவ்வளவு தான் லோன் துரை துடித்து விட்டான்.
அதோடு மட்டுமல்லாமல் கையில் இருந்த துப்பாக்கி தவறி விழுந்தது. அதோடு மட்டுமல்லாமல் வலி தாங்க முடியாமல் முட்டுக்கால் போட்டு அமர்ந்து விட்டான்.கையை உதறிய மறு நிமிடம் கை துண்டாகி தொங்கியது.
அலறினான். மறு நிமிடம் கீழே விழுந்து விட்டான். இது போராட்ட காரர்களுக்கு உற்சாகத்தினை கொடுத்தது.
அதே வேளையில் லோன் துரை மேல் இருந்து கோபம் குறையவில்லை. அனைவரும் உற்சாகமாக அவனை தாக்க ஆரம்பித்தனர்.
ஒவ்வொருவரின் தாக்குதலும் அவர் மீது விழுந்தது. இதனால் அவன் நிலைகுலைந்து போய் விட்டான்.
கூட்டத்தில் ஒருவன் தன்னுடைய கையில் இருந்த வேல்காம்பால் லோன் துரையில் விலாப்பகுதியில் குத்தினான்.
மேலும் துடித்தான் லோன் துரை.
அனைவருக்கு உற்சாகம் ஏற்பட்டது.
குத்திய வேல் கம்பு அவன் உடலில் குத்தி மறு பக்கத்துக்கு வந்தது.
லோன் துரை “ஹோ மை காட்” என்று அலறி துடித்தான்.
-ஏற்கனவே கத்திக்குத்து பட்டு கீழே விழுந்து கிடந்த மந்திர கோனை குண்டு கட்டாக தூக்கினான் இராஜகோபால்.
“ஏடேய் மந்திரம் உயிரோடுதான் இருக்கான். அவனை காப்பாத்தனும் டே. அதே நேரம் இந்த பரங்கித்தலையனை விடாதீங்க” என கத்தினான் இராஜகோபால்.
மறுநிடம் ஆயுதங்கள் சராமாரியாக பாய்ந்தது.
கம்பீரமாக நடந்து வந்தவன். வீழ்ந்துகிடந்தான். அவன் கையில் மட்டும் துப்பாக்கி இருந்து இருந்தால் அல்லது அவன் கை மட்டும் வெட்டுப்படாமல் இருந்து இருந்தால் சுமார் 2 பேரையாவது சுட்டு வீழ்த்தியிருப்பான். அவ்வளவு தைரியம் உள்ளவன். ஆனால் வீழ்த்தி விட்டார்கள். மலையை சாய்த்து விட்டார்கள். இனி அவனால் எழும்ப இயலாது. அப்படியே எழும்பினாலும் அவனால் எதுவும் செய்ய இயலாது. கம்பீரம் கவிழ்ந்து விட்டது. இனி இருந்தாலும் அவன் நடைபிணம் தான்.
ஆனால் விடாப்பிடியாக எழுந்தான். எப்படியாவது இவர்களை தாக்கிவிடவேண்டும் என மூர்க்கதனாக எழு முயற்சித்தான்.
அவன் ஒரு கையை தரையில் தாங்கியபடி எழு முயற்சித்தான்.
சுற்றி நின்ற காங்கிரஸ் காரர்களுக்கு கோபம் வந்தது. “ஏடேய் இவனை சும்மா விடக்கூடாது. எழுந்தானா நமக்கு சரவல் வந்துரும். வெட்டுங்களே”. என ஒருவன் கத்தினார்.
இதுதான் சமயம் என ஆள் ஆளுக்கு தங்களிமிருந்த ஆயுதங்களை கொண்டு லோன் துரையை தாக்க ஆரம்பித்தனர்.
ஆயுதங்கள் தாக்குதலில் அப்படியே சரிந்தான் லோன்துரை.
ரத்த வெள்ளத்தில் மிதந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு சென்றான். கடையில் அவன் உயிர் பிரிந்தது. ஒரு சகாப்தம் முடிந்தது.
மக்களை தும்சமாடியவன் சரிந்து விட்டான்.
இனி அவன் நமது மக்களை பார்த்து கர்ஜிக்க மாட்டான்.
ஆட்சியாளன் என்ற தமிறில் நம்மவர்களை அடக்க மாட்டான்.
இவன் மட்டுமா? இதுபோல ஆட்சி செய்யும் பல ஆயிரம் பேர் ஆங்கிலேயர்களுக்கு கிலி வரவேண்டும்.
இந்தியர்களை கண்டு இவர்கள் அச்சப்படவேண்டும்.
போராட்ட காரர்கள் அனைவர் முகத்திலும் ஒரு கர்வம் தெரிந்தது.
அடங்கி கிடந்த லோன்துரை மூக்கில் கைவைத்துபார்த்தான்.
“ஏடே இவன் மூச்சி நின்று விட்டது. செத்தான் லோன்”
அனைவரும் வெற்றி களிப்பில் சத்தம் போட்டனர். “வந்தே மாதரம்” என்று குரல் எழுப்பினர்.
உப்பளத்தில் ஒரு வெள்ளைக்காரனை விழ்த்தியாகி விட்டது. இனி என்ன ஒவ்வொரு வெள்ளையனும் பயத்தில் இந்த மண்ணை விட்டு சென்று விடுவான்.
வெற்றிச்செருக்கோடு அனைவரும் கிளம்பினர். அங்கிருந்த ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் சேகரித்து கொண்டனர்.
அனைவரும் கொட்டங்காடு அருகில் உள்ள சித்தன் விளைக்கு ஒடி வந்தனர்.
அங்கே பெரிய நாடார் இவர்களை பார்த்து அதிர்ந்து நின்றனர்.
பெரிய நாடார், இளைஞர்களுக்கு ஆதரவானவர்தான். ஆனாலும் இவர் கொலை செய்யும் அளவுக்கு செல்வார்கள் என நம்பவில்லை. இதனால்தான் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
“ஏலேய் என்னலே செஞ்சிய”.
“அண்ணாச்சியோ லோன் துரையை ஜோலி முடிச்சிட்டோம்”.
“என்னல சொல்லுதிய”
“ஆமாம் அண்ணாச்சி அவன் கதை முடிஞ்சி போச்சி”.
“பாவி பயலுவளா. போலிஸ்காரனுவ உங்களை விட்டு வைப்பானுவளா?”
அனைவரும் அப்பாவியாக நின்றனர்.
“ஏலேய் இப்படி ரத்தமும் கரையுமா இருந்தா எப்படி? முதலுல போய் கிணத்துல குளிங்க” என சத்தம் போட்டார்.
அனைவரும் அமைதியாக அங்கிருந்து சென்றனர். “பயலுவ பெரிய தப்பா பண்ணிட்டாங்க. பயங்காட்டியிருக்கணும். இப்படி கொலை செய்ற அளவுக்கு போயிருக்க கூடாது”. மனதுக்குள் வேதனை அடைந்தார்.
ஆனாலும் அவருக்கு பல எண்ணங்கள் சென்றது.
முதலில் இவர்கள் பசியமர்த்த வேண்டும்.
அதிகாலையிலேயே அங்கு வந்தவர்களுக்கு உணவு தயாரிக்க ஏற்பாடு செய்தார்.
பாவம் இனிமேல் என்றைக்கு நல்லச் சாப்பாடு சாப்பிடபோறாங்களோ தெரியலை.
மற்ற வேலைகளில் பெரிய நாடார் ஆரம்பித்தார்.
இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்களே. அதுபோலவே இந்த இளைஞர்கள் உற்சாகமாக கிளம்பினர்.
எல்லோரும் நன்றாக கிணற்றில் விழுந்து குளித்தனர். ஒருவரை ஒருவர் தொட்டுப்பிடித்துவிளையாடினர். பெரியநாடார் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். மேகநாதனும் வெளியேத்தான் இருக்கிறான். அவனும் பார்த்துக்கொள்வான் என சந்தோசப்பட்டனர்.
ஆனால் அந்த சந்தோசம் எல்லாம் நிலையானதுதானா? என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
அந்த தோட்டம் மிகப்பெரிய தோட்டம். அந்த தோட்டத்துக்குள் எத்தனை பேர் நின்றாலும் வெளியே தெரியாது. அப்படியே போலீஸ் உள்ளே வந்தாலும் தோட்டத்துக்குள் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடி விடலாம். எனவே தைரியமாக இருந்தனர்.
அதேவேளையில் தங்களிடம் இருந்த அடையாளங்களை அழிக்கவும் தாயராக இருந்தனர். தங்கள் கையில் கிடைத்த துப்பாக்கியை மண்ணில் தோண்டி புதைத்தனர். அரிவாள்போன்ற ஆயுதங்களை பெரிய சாக்குமூட்டையில் கட்டி கிணற்றுக்குள் இறக்கினர். அதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய சட்டை துணிமணிகளையெல்லாம் அங்கு தீயிட்டு கொளுத்தினர். இவர்களுக்கு புதிய வேஷ்டி சட்டை துண்டு எல்லாம் பெரிய நாடார் கொடுத்தார். அதை அணிந்து கொண்டார்கள்.
நல்ல வேளை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று வேஷ்டி சட்டையை உருவாக்கி வைத்திருந்தார். அது இவர்களுக்கு உதவியது.
அதற்குள் விடிந்து விட்டது.
சூரியன் என்றைக்கும் இல்லாமல் இன்று சுட்டெரித்துக் கொண்டே வந்தான்.
அதற்குள் சாப்பாடு தயார் ஆகி விட்டது.
பெரிய நாடார் அனைவரையும் அவசரமாக கூப்பிட்டார்.
எல்லாரும் வீட்டுக்கு கொல்லைப்புறத்திலேயே இருங்கள். முன்பக்கம் யாரும் தலைகாட்ட வேண்டாம் என உத்தரவிட்டார்.
அனைவருக்கும் கொல்லைப்புறத்தில் இருந்தனர். அங்கே அனைவருக்கும் சாப்பாடு கொடுத்தார்.
“ஏடே எல்லோருக்கும் செலவுக்கு பைசா தாரேன் வைச்சிக்காங்க. அவனுவ அவனுவ எப்படியாவது எங்கேயாவது ஓடிப்போயிருங்க. கையில சிக்கினீய சின்னா பின்னமாமயிருவியா. எங்காயவது போய் ஒளிஞ்சிக்கிடுங்க”. என விரட்டினார்.
அனைவரும் ஓட ஆரம்பித்தனர்.
சிலர் தேரிக்காட்டுக்–குள்ளும். பலர் கிராமங்களில் காடு கரைக்குள்ளும் புகுந்து ஒடினர். சிறிது நேரத்தில் அனைவரும் அங்கிருந்து காணாமல் போய் விட்டனர்.
******
காவல்நிலையத்தினை தட்டினார் வேல்நாடார்.
“எஜமான் உப்பளத்தில கலவம் நடக்கு”.
“என்னவோய் சொல்லுதீரு”.
“ஆமாம் அய்யா காங்கிரஸ் காரவிய ஒரு பெரிய கூட்டமா வந்து உப்பளத்தை தாக்கப்போறவ”.
“அப்படியா?”.
“யோவ் எதுக்கும் ஒரு புகார் மனு எழுதி கொடும்”.
வேல் நாடார் தலையை சொரிந்தார்.
“என்ன வோய்”
“எஜமான் எழுத தெரியாது”.
“யோவ் ஏட்டு, இவருக்கிட்ட ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிக்க. அப்புறம் உடனே நம்ம போலீஸ் படையை கூட்டு. அப்படியே நம்ம ஆதரவு காரங்க இருநதாலும் அவுகளையும் கூப்பிடு. உப்பளத்துக்கு உடனே போனும்”.
சப் இன்ஸ்பெக்டர் பரபரப்பானார்.
ஏட்டையா வேல் நாடாரிடம் கேட்டு புகாரை எழுதினார். அடுத்த நிமிடம் போலீஸ் படை உப்பளத்தினை நோக்கி கிளம்பியது.
******
உப்பளத்தில் முத்துசாமிப் பிள்ளை எழுந்தார்.
தனது கையில் கட்டப்பட்ட கட்டுகளை அருகில் உள்ள இரும்பு கம்பத்தின் மீது தேய்த்து தேய்த்து அறுத்தார்.
கை கட்டுகள் விலகியது.
மறுநிமிடம் எழுந்தார். தட்டுத்தடுமாறி நடந்தார்.
அங்கு கட்டப்பட்டு கிடந்த மற்றவர்கள் கயிற்றை அவிழ்த்தார். எல்லோரும் எழுந்தார்கள். ஒருபுறம் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அந்த தீ சுவாலை உப்பளத்தில் பட்டு, வெண்நிற உப்பளமே செந்நிறமாய் காட்சியளித்துக்கொண்டிருந்தது. அனைவரும் நம்மை கட்டிப்போட்டு விட்டார்களே என்ற கோபத்தில் எழுந்தனர். அதோடு மட்டுமல்லாமல் காங்கிரஸ் காரர்களை விடக்கூடாது என கையில் கிடத்ததை எடுத்துக்கொண்டு அவர்களை தாக்க ஓடோடி வந்தனர்.
ஆனால். இங்கே வேறு மாதிரி சம்பவம் நடந்து இருந்தது.
அங்கே ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தான் லோன் துரை. அதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவர்கள் மனதுக்குள் கிலி பிறந்தது. எங்கேயாவது மறைந்து இருந்து போராட்ட காரர்கள் நம்மை தாக்கி விடுவார்களோ என அமைதியாக பீதியுடன் நின்றனர்.
இருட்டுக்குள் சிறு அசைவு ஏற்பட்டாலே இவர்கள் மனதுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அதே வேளையில் லோன் துரை கொலையான சம்பவத்தினை போலிசிடம் சொல்ல வேண்டும். போலிசுக்கு தகவல் சொல்லப்போன வேல்நாடாரைவேறு காணவில்லை என நினைத்து அடுத்து கடடம் என்ன செய்ய என யோசித்தனர்.
*****
போலீஸ் படை உப்பளத்துக்குள் நுழைந்தது. போதிய போலீஸ் காரர்கள் இல்லாத காரணத்தினால் ஆங்கிலேய அனுதாவிகளையும் உடன் சேர்த்துக்கொண்டு வந்தனர்.
உதவி ஆய்வாளர் ராமலிங்கம் பிள்ளைத்தான் காவல்களுக்கு தலைமையாக செயல்பட்டார். ஏற்கனவே அவர் ஏற்பாடில் டாக்டர் குலங்காத்த அய்யங்காரையும் உடன் கூட்டி வந்திருந்தார்.
காரணம் இருந்தது. நிச்சயம் ஏதாவது சம்பவம் ஏற்பட்டிருக்கும். காங்கிரஸ் காரர்கள் கூடகாயம் பட்டிருக்கலாம். அவர்களுக்கு முதல் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆகவே மருத்துவம் நமக்கு நிச்சயம் தேவை என உணர்தார். இதனால் தான் மருத்துவர் உதவியோடு வந்தார்
டாக்டரும் மருத்து சிகிச்சை அளிப்பதற்காக மருந்து உபகரணங்களும் ஓடோடி வந்தார். அவர் மனதில் ஏதோ நடந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
தூரத்தில் தீப் பற்றி எரிகிறது. பல இடங்களில் பொருள்கள் உடைத்து நாசமாக்கப்பட்டு கிடக்கிறது. பெரிய கலவரம் நடந்து முடிந்து பூமிபோல அவ்விடமே காட்சியளிக்கிறது.
அவர்களை எதிர்பபார்த்து காத்திருந்த காவல்காரர்கள் கத்தினர். “எஜமான் லோன் துரையை கொன்னுப்புட்டானுவ”.
அவர் சத்தம் கேட்டு அனைவரும் முன் கேட் அருகே சென்று பார்த்த போது, அங்கே லோன் துரை கொல்லப்பட்டு கிடந்தான்.
“ஓ. மை. காட்”
அலறினார் டாக்டர். ஆனாலும் அவருக்கு ஒருவேளை லோன் துரைக்கு உயிர் இருக்குமோ என எண்ணத்தோன்றியது.
ராமலிங்கம் பிள்ளைக்கு கோபம் வந்தது. “என்னலே இந்த பயலுவ அறிவுக்கெட்ட மாதிரி வேலை பாத்துருக்கானுவ. நான் என்னவோ இரண்டு தட்டு தட்டிருப்பானுவன்னு பாத்தா இங்கே ஜோலியை முடிச்சு வச்சிருக்கானுவ”.
இராமலிங்கம் பிள்ளை காங்கிரஸ் காரர்களுக்கு உதவி செய்பவர்தான். ஆனாலும் ஒரு கொலை கேஸ் என்றால் சும்மா இருப்பாரா என்ன?. அவர் வெகுண்டு எழுந்தார்.
டாக்டர் அய்யங்கார் லோன் துரை அருகே அமர்ந்தார். கையை தேடினார். கை துண்டாகி இருந்தது. மறு கைகை பிடித்து நாடியை பார்த்தார்.
உயர்போய் இருந்தது.
உதட்டை கடித்து கண்ணை மடித்து உயிர் போய் விட்டது என சைகை காட்டினார்.
ராமலிங்க பிள்ளை எரிச்சலும் சுற்றும் முற்றும் பார்த்தார். தொடர்ந்து உடன் வந்த காவலர்களுக்கு உத்தரவு போட்டார். “உப்பளத்தில சல்லடை போட்டு தேடுங்க. உப்பளம் காவல்காரங்களை கூட வச்சிக்காங்க. உள்ளே எவனாவது காங்கிரஸ் காரன் நின்னா உடனே பிடிச்சி கொண்டு வாங்க. அவனுவளை உரிக்க உரியில எத்தனை பேரு இதுல கலந்துக்கிட்டானுவன்னு கண்டு பிடிச்சிறலாம்” என உத்தரவிட்டார்.
போலிசும், அவர்கள் உடன் வந்த கை கூலிகளும் அம்பென உப்பளத்துக்குள் பாய்ந்தனர்.
அங்கு அடிப்பட்டவர்கள் வேதமணி, பெரியநாயகம். இராமசாமிதாஸ், சுப்பிரமணிய பண்டிதன், வேலுக்கோனார், முத்துசாமிப் பிள்ளை ஆகியோரை பார்த்தார். பாவம் முகம், கை கால் என்று அவர்களுக்கு அடிப்பட்டு இருந்தது.
முதலில் இவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும். எனவே அவர்களை அழைத்து அருகில் உள்ள திரட்டில் உட்கார வைத்து கொண்டுடார். அரிக்கேன் லைட் ஒன்றை கொண்டு வரச்சொன்னார்.
அதன் பின் அந்த வெளிச்சத்தில் அவர்களுக்கு முதலுதவி செய்தார். அதன் பின் காயம்பட்டஇடத்தில் மருந்து போட்டு, கட்டுப்போட்டார்.
லோன் துரை பயன்படுத்திய ஜீப் கொண்டு வரப்பட்டது. அதில் காயம் பட்டவர்களை ஏற்றி மேல் சிகிச்சைக்காக உடன்குடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்.
டிரைவர் இவர்களை ஆஸ்பத்திரியில விட்டுட்டு உடனே வா. உனக்கு நிறைய வேலை இருக்கும் என்றார் டாக்டர்.
டிரைவர் பெயர் லால்சாகிப். “சரி சாப்” என அவன் கூறிவிட்டு ஜீப்பை ஓட்ட ஆரம்பித்தார்.
அடுத்து கட்டம் லோன் துரையில் உடலை ஆய்வு செய்தனர்.
இப்போது அங்கே டாக்டர், சப் இன்ஸ்பெக்டர் , மற்றும் ஒரு போலீஸ் மட்டும் இருந்தனர்.
டாக்டர் லோன் துரை காயத்தினை ஆய்வு செய்து கூற போலிஸ் அதை தாளில் குறிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து காயம் குறித்து குறிப்பு எடுக்க ஆரம்பித்தார்.
பிரேத பரிசோதனையில் லோன்துரையின் உடம்பில் 16 காயங்கள் இருந்தன.
முதல் காயம் உடம்பின் இடது பக்கம் இருந்தது. அந்த காயம் எலும்பை முழுவதும் வெட்டியிருந்தது. இதனால் எலும்பு உடைந்து சிதைந்து காணப்பட்டது. டாக்டர் முகம் சுளித்தார். “பாவம் எப்படி பண்ணியிருக்கானுவ. சேய்”
2 வது காயம் உடம்பின் இடது பக்கம் இருந்தது. இதில் அவரது எலும்பு உடைந்து இருந்தது. காங்கிரஸ் காரர்கள் தான் வெறி கொண்டு தாக்கியிருக்கிறார்களே. அந்த தாக்குதல் இங்கே உடலையையே நொறுக்கி இருந்தது. அதையும் குறித்துக்கொண்டார்கள்.
3 வது காயம் மிகப்பெரிய வெட்டுக்காயம் . இதனால் அவரது குடல் சரிந்து இருந்தது. இதனால் தான் லோன் துரை உயிர் இழந்து இருக்கிறான்.
4 வது காயம் இடது கையில் ஐந்து அங்குல நீளமுடைய வெட்டுக்காயம் இருந்தது. இக்காயம் இடது கையின் பின்பக்கத்தில் ஏற்பட்டு கை முட்டுக்களை வெட்டியுள்ளனர். அய்யோ பாவம். அதனால் தான் இவன் எழுந்து நிற்க முடியாமல் சரிந்து விழுந்து இருக்கிறான்.
5 வது வெட்டு காயமும் அதுபோலவே மற்றொரு இடத்தில் இருந்தது. பரிதாபம் தான். இத்தனை வெட்டு ஒரு மனிதன் மீது விழ வேண்டாம். ஆனால் சுதந்திர வேட்கை இப்படி விழுந்திருக்கிறது.
6 வது காயம் இடது முழங்கையிலுள்ள சிறிது வளைவான வெட்டுக்காயமாகும். இது மேலிருந்து கீழாக வெட்டப்பட்டிருந்தது. இந்த காயத்தினால் பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், ரணம் ரணம்தானே.
7 வது காயம் வலது முழங்கையில் ஏற்பட்டுள்ள இரண்டு எலும்பு முறிவுகளாகும். எலும்புகளை முழுவதும் நொறுக்கி இருக்கிறார்கள் பாவிகள். இந்த எலும்புகளையெல்லாம் பாண்டார விளை நாடார் கிட்டேபோனாலும் ஒட்டவைக்க முடியாது. அந்த அளவுக்கு நொருங்கி இருக்கிறது.
8 வது காயம் வலது முழங்கைக்கு மேலே ஏற்பட்டிருந்த வெட்டுக்காயம் ஆகும்.
9 வது காயம் மிகப் பெரிய காயம் உடம்பில் வலது பக்கத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள குத்துக்காயம் ஆகும், அது ஈரலையும் தாக்கி விட்டது. முக்கிய உயிர்காக்கும் உறுப்புகளையெல்லாம் துண்டாக்கி விட்டார்கள்.
10 வது காயம் இரண்டாவது விலா எலும்பை வெட்டியுள்ளது. விலா எலும்பு எவ்வளவு முக்கியம். அதுவே இங்கே செயலிழந்து போய் விட்டது.
11 வது 12வது காயங்கள் வலது தோளுக்கு முன்னும் பின்னும் ஏற்பட்டுள்ள வெட்டுக்காயங்கள் ஆகும். நிமிர்ந்த தோளுக்கு சொந்தக்காரனாக இருந்தானே. இப்போது அவனை கூனிக்குறுக வைத்து விட்டார்களே.
13 வது 14 வது காயங்கள் வலது கையில் ஏற்பட்டுள்ள இரண்டு வெட்டுக் காயங்களாகும். இதில் தான் ஒரு கை துண்டாகி விட்டது.
15 , 16 வது காயங்கள் தலையின் பின்பக்கமுள்ள ஆழமான வெட்டுக் காயங்களாகும். பின் மண்டை உடைந்த பிறகு அவனுக்கு உயிர் இருந்தால் என்ன? போனால் என்ன என்ற நிலையில் இந்த காயம் இருந்தது.
வேண்டுமென்று செய்ய வில்லை. ஆனாலும் செய்திருக்கிறார்கள். ஆனால் இதை பார்க்கும் போது திட்டமிட்டு லோன் துரையை கொன்று விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. அப்படித்தான் போலிசாரும் பதிவு செய்வார்கள். நீதியரசர்களும் இதன் அடிப்படையில் தான் வழக்கை விசாரிப்பார்கள். நிச்சயம் கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனைதான் கிடைக்கும்.
இப்படி மூர்க்கத்தனமாக வெட்டியபிறகு சில வினாடிகளே லோன்துரை உயிரோடு இருந்திருக்க முடியும். அவன் மூச்சு உடனே அடங்கியிருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட பிரேத பரிசோதனையை அங்கேயே முடித்து விட்டார் டாக்டர்.
ஆனாலும் முடிவான பிரேத பாரிசோதனை செய்ய வேண்டும் அல்லவா?.
இதற்கிடையில் பாய் ஜீப்பை திருப்பி கொண்டு வந்தார்.
“அய்யா எல்லோரையும் ஆஸ்பத்திரியில விட்டுட்டு வந்துட்டேன் அடுத்தாப்புல என்ன செய்யனும்” என கேட்டார்.
லோன் துரை உடல் அந்த ஜீப்பில் ஏற்றப்பட்டது. இதற்குள் உப்பளத்துக்குள் சென்ற போலிஸ் அனைவரும் திரும்பி வந்தனர்.
“ எஜமான் உள்ளே யாரும் இல்லை . அனைவரும் தப்பி ஒடிவிட்டனர்”. என்றனர்.
“அது சரித்தான் கொலையை செய்திட்டு இங்க நின்னுகிட்டு பரக்க பரக்கவா பாப்பானுவ”. சப் இன்ஸ்பெக்டர் கோபமாக பேசினர்.
“சரி விடு. எங்கே போவனுவ. இங்கன எங்கயாவது சோவருவானுவ. பிடிச்சிறலாம். பிடிச்சு உரிய தண்டனை வாங்கி கொடுத்திறலாம்”
சப் இன்ஸ்பெக்டர் தீர்க்கமாக சொன்னார்.
ஜீப் கிளம்பியது. அதில் லோன் துரை உடல் பரிசோதனைசெய்யும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது..
ஒரே பரபரப்பு.
ஆங்கியே துரையை கொன்று விட்டார்கள்.
தந்தி பறந்தது. இங்கிலாந்து வரை பரபரப்பு ஏற்பட்டது. “எவ்வளவு தைரியம். இந்த இந்தியர்கள் இப்போது வெள்ளையர்களை அடித்து விரட்ட தயாராகி விட்டார்கள். எப்படி முடியுமா?”
“இவர்களை போலீஸ்தான் சும்மா விடுமா?”
“அந்த கொலையை ஒருவர் செய்யவில்லை”.
“20 க்கும் மேற்பட்டவர்கள் செய்திருக்கிறார்கள். அவர்களை சும்மா விட முடியுமா?”
நிச்சயம் இதற்கு பின்னால் பெரும் பாதிப்பு இளைஞர்களுக்கு இருக்கும். ஆனால் அதுப் பற்றி புரியாமல் இளைஞர்கள் தேரிக்காட்டுக்குள் திரிந்து கொண்டிருந்தார்கள்.
*****
அந்த நாள் 20.09.1942
காலை 9 மணி நெல்லை கலெக்டர் அலுவலகம் பரபரப்பானது.
கலெக்டர் ஹெமாடி பரபரப்பானர்.
ஒரு ஆங்கிலேயனை கொன்று விட்டார்கள்.
“என்ன மேன் என்ன செய்யுறே. அவனுவளை பிடிக்காம என்ன பண்ணுறே”
திருநெல்வேலி டெப்டி சூப்பிரண்ட் ராவ்பகதூர் டி.எம. அப்பாத்துரை அவர் முன்னால் நின்று கொண்டிருந்தார்.
“நீ என்ன செய்வே. ஏது செய்வே தெரியாது. 24 மணி நேரத்துல குற்றவாளியை பிடிக்கனும்” என்று உத்தரவிட்டார்.
கலெக்டரிடம் திட்டு வாங்கிய கோபத்தில் அங்கிருந்து கிளம்பினார் அந்த போலீஸ் அதிகாரி.
மிகப்பெரிய போலீஸ் படையை திரட்டிக்கொண்டு உடன்குடியை நோக்கி பயணம் செய்தார்.
ஒரு பக்கம் போலீஸ் படை தென் பகுதிக்குள் நுழைகிறது.
அதே வேளையில்
குலசேகரபட்டினம் வடக்கூரில் உள்ள சி.எஸ்.ஐ, கல்லறைத் தோட்டத்தில் லோன் துரை உடலை அடக்கம் செய்தனர்.
கிறிஸ்தவ முறைப்படி பாதியார்கள் அங்கே வந்து அவருக்கு முழுவதுமாக நித்திரை அடைய வேண்டி ஜெபங்களை கூறி அடக்கம் செய்தனர்.
இதற்காக திறண்டு வந்த ஆங்கியேலர்களுக்கு இங்குள்ள மக்கள் மீது கோபம் தான். ஆனால் யாரும் அதிகமாக பேசவில்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்து விடும் என்ற நிலைத்தான் இப்போது இருந்தது . ஆனால் அவர்கள் அடிமைப்படுத்திய இந்தியர்களோ இப்படி வெகுண்டு எழுவார்கள் எனஅவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.
நேருக்கு நேர் போர் பார்த்து இருக்கிறார்கள். பல போர்நடந்திருக்கிறது. அதில் பலர் உயிரை இழந்து இருக்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் கிளர்ச்சி செய்த ஒரு தலைவனை கொலை செய்யவில்லை.
குறிப்பாக ஊமைத்துரை காலத்தில் கூட 44 ஆங்கிலேயர் உயிர் இழந்து உள்ளார்கள். அவர்களுடைய கல்லறை கூட பாஞ்சாலங்குறிச்சி அருகில் உள்ளது.
ஆனால் இங்கு அதுபோல போர் செய்து சாகவில்லை. மொத்தமாக வந்து ஒரு அதிகாரியை கொலை செய்து இருக்கிறார்களே.
ஆங்கிலேயர்கள் கை இறங்குகிறது. இனி கவனமாக பேச வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். கவனமாக ஊர்போய் சேர வேண்டும்.
அனைவர் முகத்திலும் ஒரு வகையான கிலி பரவியது. ஆனால் அவர்கள் அதை வெளி காட்ட வில்லை.
அமைதியாக கலைந்து சென்றனர்.
ஆனால் போலிசார் ஆட்டமோ அதிகரித்தது. இந்த போலீஸ் படையில் இருப்பவர்கள் அனைவரும் நம்மவர்கள் தான். ஆனாலும் விஸ்வாசம் என்ற பெயரில் ஆட்டம் துவங்கியது.
டெப்டி சூப்ரின்டென்ட் ராவ்பகதூர் டி.எம்.அப்பாத்துரை பிள்ளையின் போலிஸ்படையுடன். தூத்துக்குடி மாஜிஸ்திரேட் ஸ்ரீவைகுண்டத்தில் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
ரிசர்வ் போலீஸ் படை நண்பகல் உப்பளத்தை வந்தடைந்தது.
டெப்டி சூப்ரின்டென்ட் டி.எம்.அப்பாத்துரை பிள்ளை ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த விசாரணையை மேற்பார்வையிட்டார். அவர்களிடம் எல்லாம் விசாரித்தார். இராமலிங்கம் பிள்ளையிடம் வழக்கு குறித்து விவரித்தார். அவர் இதுவரை விசாரித்தது. பிரேத பரிசோதனை செய்தது என அனைத்து அறிக்கையையும் வாங்கி கொண்டார்.
தொடர்ந்து போலிசின் வெறியாட்டம் ஆரம்பித்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
ரிசர்வ் போலீஸ் துணையுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்திய பின்னர் குற்றவாளிகளை பட்டியலிட்டு உறுதி செய்தனர்.
இராசகோபால்,
காசிராஜன்,
ஏ.எஸ், பெஞ்சமின்,
ஆர்.செல்லத்துரை,
தர்மம் கோயில் பிள்ளை,
கே. பொன்னையா நாடார்,
பி. நாராயணப்பிள்ளை,
ரெத்தினசாமி என்ற பெருமாள் நாடார்.
மகாராஜன் நாடார்.
தேவயிரக்கம் நாடார்.
கனிநாடார் நாடார்.
செல்லத்துரை,
தங்கையா நாடார்.
ஆறுமுக நாடார்.
நாராயணன். நெல்லையப்ப சேர்வை,
சிவந்திகண் என்ற முத்து மாலை நாடார்,
தங்கச்சாமி நாடார்,
மோட்டார் என்ற ரெத்தினசாமி,
பூவலிங்கம் நாடார்.
மு.லெட்கமணன்,
தங்கையா என்ற ஆசிர்வாத நாடார்,
காசி நாடார்,
துரைச்சாமி நாடார்,
க. லட்சுமண நாடார்.
வி மந்திரக் கோன்
ஆகிய 26 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இனி அவர்களை தேட வேண்டும்.
அவர்களின் உறவினர்கள் வீட்டில் சென்று அடித்து நொறுக்கினால் குற்றவாளிகள் நம்மை வந்தடைவார்கள். எனவே மறு நிமிடம் உடன் குடி பகுதிக்குள் போலிஸ் படை புகுந்தது.
குறிப்பாக காங்கிரஸ்கார்கள் வீடுகளை பார்தது தாக்கினர்.
(குலசேகரபட்டினம் கொலை வழக்கு தொடரும்)


