தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெயில் அதிகரித்து வரும் நிலையில், இன்று ராமநாதபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, குமாரபுரம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், காயல்பட்டினம் ஆறுமுகநேரி, ஆத்தூர், குலசேகரபட்டினம், உடன்குடி பல்வேறு பகுதிகளில் பெற்று நள்ளிரவு முதல் தற்பொழுது மழை பெய்து வருகிறது.
அதே போல் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செய்துங்கநல்லூர், கருங்குளம், புதுக்குடி, ஆழ்வார் திருநகரி போன்ற பகுதிகளிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் மட்டும் 106 மீ மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையினால் திருச்செந்தூர் பஜார் பகுதி முழுவதும் மழை நீர் ஓடியது. வடக்கு ரத வீதி பகுதியில், பாதாள சாக்கடை தண்ணீரும் இந்த மழை நீரில் வெளிவந்து கரை புரண்டு ஓடி காணப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வைத்த நிலையில், தற்பொழுது விட்டுவிட்டு பெய்து வரும் மழையினால் திருச்செந்தூர் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


